We will fight if we do not renew electricity within a week - Marxist Communist Warning
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில், ஒரு வாரத்திற்குள் மின்வெட்டைச் சீர்செய்யாவிட்டால் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன் திருத்துறைப்பூண்டியில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், “கடந்த சில நாள்களாக திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென மின் தடை ஏற்படுகிறது.
நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப்புறங்களில் மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் ஏற்றி வழக்கம் போல் குடிநீர் அளிக்க முடியவில்லை. ஏற்கெனவே, இம்மாவட்டத்தில் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது.
இந்த நிலையில் இப்போது ஏற்படும் மின் தடையின் காரணமாக மின் மோட்டார்களை பயன்படுத்தி கிராமப்புறங்களில் நீர்த் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி வீடுகளுக்கு அளித்து வந்த குடிநீரும் உரிய முறையில் அளிக்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
விரைவில் அக்னி நட்சத்திரக் காலம் தொடங்க இருப்பதாலும் இன்னும் கூடுதலாக கோடை வெப்பம் தாக்கப்படும் சூழ்நிலை இருக்கிறது.
இப்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டால் அவதியுறும் நகர்ப்புற, கிராமப்புற மக்கள் நலன் கருதி தமிழக அரசும், மின்வாரிய நிர்வாகமும் இந்த திடீர் மின்வெட்டை உடனே சரிசெய்ய முன்வர வேண்டும்.
ஒரு வார காலத்திற்குள் சீர் செய்யாவிட்டால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய அலுவலகங்கள் முன்பும் மக்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்” என்று அதில் தெரிவித்துள்ளார்.
