we will die if your implement buddhan dam water scheme - farmers
கன்னியாகுமரி
புத்தன் அணையில் இருந்து புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் நாங்கள் உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டோம் என்றும் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம் என்றும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். அதேபோல விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை வகித்து மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நிஜாமுதீன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் சுப்பிரமணி, மாவட்டப் பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, விவசாய சங்கப் பிரதிநிதிகள் புலவர் செல்லப்பா, மருங்கூர் செல்லப்பா, பத்மதாஸ், விஜி, முருகேசபிள்ளை, வருக்கத்தட்டு தங்கப்பன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டம் தொடங்கியதும் மழை அளவு, அணைகளில் நீர் இருப்பு, உரம் மற்றும் விதைகள் இருப்பு விவரம் தெரிவிக்கப்பட்டது.
இதில், நாகர்கோவில் நகரின் குடிநீருக்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்து விவசாயிகள் விவாதம் செய்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது விவசாயிகள், “நாகர்கோவில் நகர குடிநீர் தேவைக்காக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் எடுத்து, விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வந்து சேரும் இடமான புத்தன் அணையில் இருந்து புதிய குடிநீர் திட்டத்தை செயல்படுத்தப்போவதாக நாங்கள் அறிகிறோம்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயிகளாகிய நாங்கள் உயிரைக் கொடுக்கவும் தயங்கமாட்டோம். தீக்குளிப்பு போராட்டம் நடத்துவோம்.
எனவே அரசால் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள உலக்கை அருவி திட்டம், குழித்துறை தாமிரபரணி திட்டம் போன்றவற்றை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்” என்று விவசாயிகள் கூறினர்.
அதற்கு ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான், “இது தொடர்பாக விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
அதற்கு விவசாயிகள், “கருத்துக்கேட்புக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராக முடிவுகள் எடுக்கப்பட்டால் தீக்குளிப்புப் போராட்டம் நடத்த வேண்டி இருக்கும்” என்று தெரிவித்தார்.
