வேலூர்

ஆர்.எஸ்.எஸ்.சின் எண்ணங்களை திணிப்பதில் தீவிர கவனம் செலுத்தும் மத்திய பாரதீய ஜனதா அரசை தொடர்ந்து எதிர்ப்பதுடன், போராட்டங்கள் நடத்துவோம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில தலைவர் ஆனூர் ஜெகதீசன் கூறினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில செயற்குழு கூட்டம் கோயம்புத்தூர் காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செ.துரைசாமி, பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநிலம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலத் தலைவர் ஆனூர் ஜெகதீசன் கூறியது:

“தமிழ்நாட்டில் உள்ள வங்கிகளில் அனைத்து விண்ணப்ப படிவங்களும் மாநில மொழியில் அச்சிட்டு வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழில் அச்சிடப்பட்ட விண்ணப்ப படிவங்களை வழங்காமல் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது. இதை கண்டித்து வங்கிகளை முற்றுகையிட்டு விரைவில் போராட்டம் நடத்துவோம்.

சமூகத்தை பிளவுபடுத்தும் பூணூல் அணியும் விழாவை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை மாவட்ட கழகம் சார்பில் அடுத்த மாதம் ஆகஸ்டு 7–ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி முன்பு போராட்டம் நடத்த இருக்கிறோம்.

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் வகையில் நீட் நுழைவு தேர்வை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கும் விரைவில் நீட் தேர்வு கொண்டு வரப்பட உள்ளது. மத்திய பாரதீய ஜனதா அரசு வேண்டும் என்றே தமிழக மாணவர்களை பாதிக்கும் வகையில் இதனை கொண்டு வந்துள்ளது. வருகிற 27–ஆம் தேதி தி.மு.க. நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறோம்.

மதுரை கீழடியில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுக்கு அனுமதி வழங்க மறுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாரதீய அரசின் செயல்பாடுகளை கண்டித்து மாவட்ட வாரியாக பிரசாரம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டங்களை கைவிடுவதுடன், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற வேண்டும்.

மத்திய பாரதீய ஜனதா அரசில், ஆர்.எஸ்.எஸ்.சின் எண்ணங்களை திணிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். இதை தொடர்ந்து எதிர்ப்பதுடன், போராட்டங்கள் நடத்துவோம்” என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் புதுச்சேரி மாநில தலைவர் வீரமோகன், தலைமை நிலைய செயலாளர் வை.இளங்கோவன், மாநில அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி, வெளியீட்டு பிரிவு செயலாளர் மனோகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.