பாஜக திட்டமிட்டு வெறுப்பு அரசியலை பரப்புகிறது, சிஏஏ, முத்தலாக் போன்ற சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Thirumavalavan: திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்: பாஜக அரசு திட்டமிட்டு வெறுப்பு அரசியலை ஆட்சி அதிகாரம் மூலம் பரப்புகிறார்கள். பா.ஜ.க அரசு ஆட்சியில் அமைந்ததிலிருந்து சி.ஏ.ஏ, முத்தலாக் சட்டம், வக்ஃபு திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்தது அரசியலமைப்பு சட்டத்திற்கும் அதன் உயிர் மூச்சான மதச்சார்பின்மைக்கும் எதிரானது. இது முஸ்லீம்களுக்கு எதிரானது என்றாலும் கூட அரசியலமைப்பு சட்டத்திற்கு தான் எதிரானது தான். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் நோக்கில் அதன் உயிர்மூச்சான மதச்சார்பின்மையை காக்க தான் இந்த பேரணி நடத்துகிறோம்.
மதத்தின் பெயரால் முருகன் மாநாடு
எந்த மதத்தின் சொத்து நிர்வாகத்திலும் தலையீடாத ஒன்றிய அரசு இஸ்லாமியர்களின் சொத்து விவகாரத்தில் வெளிப்படையாக தலையிடுவது அரசியலமைப்பு, மதச்சார்பின்மைக்கு எதிரானது. 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பை கட்டவிழ்த்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். தற்போது தமிழ்நாட்டிலும் அதற்கான முயற்சியை செய்து வருகிறார்கள். தமிழகத்தில் சமூக நீதி, தலித் மக்களுக்கு எதிரான் பிரச்சனைகள், அடிப்படை பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை குறித்து பேசாத பாஜகவினர் இன்று மதத்தின் பெயரால் முருகன் மாநாடு நடத்துகிறார்கள். கடவுள் நம்பிக்கையை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தப்பார்க்கிறார்கள். இந்த சூழலில் தான் தமிழ்நாட்டை காக்கவும் அரசியலமைப்பையும் மதச்சார்பின்மையை காக்கவும் பேரணி நடத்துகிறோம். கட்சி சார்பற்ற முறையில் அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த பேரணியில் பங்கேற்க வேண்டும். மதச்சார்பின்மைக்கு ஆதரவானவர்கள் இந்தியா கூட்டணியிலும் மதச்சார்பின்மைக்கு எதிரானவர்கள் பா.ஜ.க தலைமையிலும் அணி சேர்ந்துள்ளார்கள் அந்த கூட்டணியில் தான் அதிமுகவும் உள்ளது.
அதிக தொகுதிகள் கேட்போம்
விசிக நடத்தும் பேரணி தேர்தலை மையப்படுத்தி நடத்தப்படல்லை, கொள்கை அடிப்படையில் தான் நடத்துகிறோம். தேர்தலில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்பது குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது. இந்த தேர்தலில் மட்டும் அல்ல எல்லா தேர்தலிலும் நாங்கள் அதிக தொகுதிகள் தான் கேட்போம். எங்களுக்கு எதிர்ப்பார்புகள் உண்டு. கட்சி நலன் முக்கியமானது. ஆனால் அதை விட கூட்டணி நலன் முதன்மையானது. எனவே எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தேர்தல் நேரத்தில் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்போம்.
கூட்டணி முழு வடிவம் பெறவில்லை
திமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுவது மாயத்தோற்றம். திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பார்க்கிறார்கள். ஆனால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்த சலசலப்புக்கும் அஞ்சாமல் உறுதியாக இருக்கிறோம். அவர்களுடன் கூட்டணியில் இருந்த பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இன்று அவர்கள் கூட்டணியில் இல்லை. அவர்களையே மீண்டும் அந்த கூட்டணியில் இணைக்க முடியாத நிலையில் தான் பாஜக அதிமுக உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்த பொழுது பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அவரை சந்திக்க விரும்பவில்லை. இதிலிருந்தே அந்த கூட்டணி முழு வடிவம் பெறவில்லை என்பது தெரிகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் அதிமுக பாஜக கூட்டணிக்கு வருவார்கள் என கூறுவது நகைப்புக்குரியது.
அண்ணாமலை பாஜக கூட்டணியை சிதைக்க பார்க்கிறார்
2026 ல் பாஜக ஆட்சி என கூறும் அண்ணாமலை பாஜக கூட்டணியை சிதைக்க பார்க்கிறார். தான் இல்லாமல் பாஜக - அதிமுக கூட்டணி அமைந்ததையும் வேறு கட்சிகளை அவர்கள் கூட்டணியில் சேர்ப்பதையும் அண்ணாமலை விரும்பவில்லை. உலகத்தில் ஊழலற்ற ஆட்சி என்பது எங்கும் கிடையாது. ஆட்சி அதிகாரம் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும் அதை கூறி ஒரு ஆட்சியை வீழ்த்த முடியாது. அண்ணாமலை தலைவராக இருந்த போது அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்தார். ஆனால் அது குறித்து எந்த ஆதாரமும் அவர் தரவில்லை. இது தான் தமிழக அரசியலின் நிலை. ஊழல் மிகப்பெரிய பிரச்சனை தான் அதை விட மேலான பிரச்சனைகள் உள்ளது. மதவாத ஜாதியவாத பிரச்சனை ஊழலை விட பெரியது. மத வெறி ஜாதி வெறி மக்களை எதையும் சிந்திக்க விடாது. அதை தான் முதலில் வீழ்த்த வேண்டும் என்றார்.