Asianet News TamilAsianet News Tamil

உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்...

We will appeal against the cancellation of the high Court by minister vijaya baskar
We will appeal against the cancellation of the high Court by minister vijaya baskar
Author
First Published Jul 14, 2017, 1:15 PM IST


நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றும், அரசியல் ரீதியாகவும் நீட் தேர்வை எதிர்த்து போராடி வருகிறோம் என்றும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

மருத்துவ படிப்புக்கான 85 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்தி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பல்வேறு கட்சியினரும், சமூக அமைப்பினரும் நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசுக்கு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தது. அதற்கு மாநில அரசு சார்பில், மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்து, அரசாணை பிறப்பித்தார். 

அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஎஸ்இ பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கின் தொடர் விசாரணை இன்று நீதிமன்றத்துக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு அனைவருக்கு பொதுவானது. இட ஒதுக்கீடு விஷயத்தில், சிபிஎஸ்இ மாணவர்களும் உட்படுத்த வேண்டும். 85 சதவீதம் மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் சேர்க்கை நடந்தால், மீதமுள்ள 15 சதவீதத்தில் சிபிஎஸ்இ மற்றும் வேறு பாடத் திட்டத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை 319 பேர் சேர்க்கப்படுவார்கள்.

இதனால், சிபிஎஸ்இ உள்பட மற்ற பாடத் திட்டத்தில் படித்தவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். 

எனவே, தமிழக அரசு, மருத்துவ படிப்புக்காக பிறப்பித்த 85 சதவீத இட ஒதுக்கீடு ஆணையை ரத்து செய்வதாக கூறி உத்தரவிட்டது.

இந்த நிலையில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு குறித்து உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து மேல்முறையீடு செய்வதாகக் கூறினார். சென்னை, தலைமைச் செயலகத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மருத்துவ மாணவ சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேல்முறையீடு செய்வதற்காக மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறினார். இந்நேரம் வரை நீட் தேர்வை எதிர்த்து போராடி வருகிறோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.

கடைக்கோடியில் உள்ள மாணவர்களின் உரிமைக்காகவும் அம்மாவின் அரசு போராடிக் கொண்டிருக்கிறது. சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நீட் தேர்வை எதிர்த்து போராடி வருகிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios