கடலூர்

எங்கள் பகுதியில் இருக்கும் குறைகளை கிராமசபை கூட்டத்தில் எடுத்துக் கூறலாம் என்று நினைத்தோம் ஆனால், பெ.பூவனூரில் கிராம சபை கூட்டம் நடத்த ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஒருவர் கூட வராமல் இப்படி ஏமாற்றிவிட்டார்களே என்று மக்கள் வருத்தப்பட்டனர்.

மே 1–ஆம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி அனைத்து ஊராட்சியிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

நல்லூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெ.பூவனூர் ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் கலந்து கொள்வதற்காக பெ.பூவனூர் கிராம மக்கள், ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு வந்தனர். ஆனால், மதியம் 1 மணி ஆகியும் கூட்டம் நடத்துவதற்காக ஊராட்சிச் செயலாளர் உள்ளிட்ட ஒன்றிய அதிகாரிகள் எவரும் வரவில்லை.

பொறுத்து பொறுத்து பொருமை இழந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், கூட்டம் நடத்த வராத ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி எழுத்தரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

ஆனால், கடைசிவரை அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த யாரும் வராததால், அவர்களாகவே போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியது:

“எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், தெருவிளக்குகள் எரியாமல் கிராமம் இருள் சூழ்ந்து கிடக்கிறது.

இதுகுறித்து பலமுறை போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் கிராம சபை கூட்டம் நடத்தும்போது, தங்கள் குறைகளை எடுத்துக் கூறலாம் என நினைத்திருந்தோம். ஆனால், கூட்டம் நடத்த அதிகாரிகள் ஒருவர் கூட வராமல் எங்களை மீண்டும் ஏமாற்றிவிட்டனர்.

மேலும், ஊராட்சிச் செயலாளர் தனக்குத் தெரிந்த நான்கு பேரிடம் மட்டும், கையெழுத்து வாங்கிக் கொண்டு கிராம சபை கூட்டம் நடத்தியதாக பதிவேடு தயார் செய்துள்ளார் என்று குற்றம் சாட்டினர்”.