திருப்பூர்,
திருப்பூரில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற வந்த மக்களுக்கு 2000 ரூபாய் நோட்டு மட்டும் தான் விநியோகம் செய்யப்பட்டது. 500 ரூபாய் நோட்டு வங்கியிலேயே இல்லையாம்.
இந்தியா முழுவதும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து எப்படா வங்கிகள் மற்றும் தபால் நிலையம் திறக்கும் என்று காத்திருந்தோரின் எண்ணிக்கை பெரிது.
இரண்டு நாள்கள் ஏ.டி.எம். மையங்களும் செயல்படவில்லை.
திருப்பூரில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருக்கும் பொதுமக்கள் அவற்றை சில்லரையாக மாற்ற முடியாமல் பெரிதும் திணறினர்.
அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் அல்லல் பட்டனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் திருப்பூரில் உள்ள அனைத்து வங்கிகளுக்கு முன்பும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வங்கிகள் திறந்ததும் பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொண்டார்கள்.
ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட்டு, பான்கார்டு, ஓட்டுனர் உரிமம் இவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் மற்றும் நகல் கொண்டு வந்து, வங்கிகளில் கொடுத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொண்டனர். ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது.
மதியத்துக்கு மேல் ஆகியும் கூட்டம் குறைந்த பாடில்லை. பணத்தை மாற்றுவதற்காக வங்கிகளுக்கு படையெடுத்ததால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு லீவு எடுத்தே சென்றுள்ளனர்.
பெரும்பாலான வங்கிகளில் சில்லரையாக ரூ.100 நோட்டுகள் கொடுக்கப்பட்டன. சில வங்கிகளில் மட்டும் புதிய ரூ.2000 நோட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. புதிய ரூ.2000 நோட்டுகளை பெற்றவர்கள் அந்த நோட்டு தங்களுக்கு வேண்டாம் என்றும் சில்லறையாக கொடுங்கள் என்று கேட்டுப் பெற்றுக் கொண்டனர்.
அதுபோல் திருப்பூரில் உள்ள தலைமை தபால் நிலையத்தின் முன்பு நேற்று காலை நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். தபால் நிலையத்தில் வெள்ளிக்கிழமை முதல் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஆனால் பொதுமக்கள் அதிகமாக வந்ததால் நேற்று மதியம் 12 மணிக்கு மேல் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை தபால் நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு ரூ.100 நோட்டுகளாக சில்லரை வழங்கப்பட்டது.
ஆனால் புதிய ரூ.500 நோட்டுகள் எந்த வங்கியிலும் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. ரூ.2,000 வழங்கியதால் மீண்டும் அந்த நோட்டுக்கு சில்லரை பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. எனவே புதிய ரூ.500 நோட்டுகள் வழங்காததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
