திருச்சி
கேரளாவில் ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளிடம் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு குறித்து நாங்களும், அதேபோல, கர்நாடகாவில் ஆட்சி செய்கிற காங்கிரசு கட்சியினரிடமும் தமிழக காங்கிரசு கட்சி தலைவரும் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தலாம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
100 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள், கடைகள் நடத்துபவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அவர்கள் மீது அரசு எடுத்து வரும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இருந்த ஏரிகள், குளங்கள் மாயமாகி விட்டன. இந்த ஏரி, குளங்களை மீட்க வேண்டும். இதற்கான பணிகளில் இராணுவத்தை பயன்படுத்தினால் கூட தவறில்லை.
கேரளாவில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். எங்கள் கட்சி சார்பில் ஒரு குழுவை நியமித்து அந்த குழுவினர் கேரளா - தமிழகம் இடையே உள்ள முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை குறித்து பேசி சுமுக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எங்கள் கட்சியின் தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
இதேபோல் கர்நாடகாவில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் கட்சியினரிடமும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, தமிழகத்துக்கான தண்ணீர் உரிமையை பெற்று தர முயற்சிக்க வேண்டும்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வில் பல மாற்றங்களை செய்து வருகிறார்கள். இதற்கு சட்டப்படி அந்த கட்சிக்கு உரிமை உண்டு. மக்களும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
புதிதாக பொறுப்பேற்பவர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.
தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படும்போது, மாநில உரிமைகளை நிலைநாட்டி கொள்வதில் ஜெயலலிதா யாருக்கும் பணியாமல் உறுதியோடு இருந்தார். அதேவழியை இப்போது பொறுப்பேற்க உள்ள சசிகலாவும் கடைபிடிக்க வேண்டும்.
தமிழகத்தின் உரிமைகளை மதிக்காத மத்திய அரசுக்கு பணிந்து போகக்கூடாது. போராடி உரிமைகளை பெற வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வத்தை மாற்றிவிட்டு சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்பது குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தேர்தலின் போது தான் தெரியவரும் என்று அவர் கூறினார்.
இந்தப் பேட்டியின்போது, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் இந்திரஜித், மாவட்ட செயலாளர்கள் சுரேஷ், கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
