We need to run extra buses in our town - people emphasis Tamilnadu Government

தேனி

கம்பம்,போடி மற்றும் தேவாரம், உத்தமபாளையத்திற்கு கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மக்கள், தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் நீதிமன்றம், வட்டாரப் போக்குவரத்துஅலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளன.

அதேபோல தேவாரம் , பண்ணைப்புரம் மற்றும் கோம்பை பகுதிகளுக்கும் அதிகளவில் மக்கள் சென்று வருகின்றனர். கோம்பையிலுள்ள வட்டார ஆரம்ப சுகாதார வளாகம் மற்றும் தேவாரத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.

அதேபோல விவசாயிகள் காய்கறிகளை தேவாரத்தில் செயல்படும் தினசரி காய்கறி சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இப்பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் உத்தமபாளையம்,கம்பம், தேனி,வீரபாண்டி போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளியூர்களுக்குச் சென்று வரும் இப்பகுதியில் குறைந்த அளவிலே நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வழியாக செல்லும் பெரும்பாலான பேருந்துகள் போடி வரையில் சென்று திரும்புவதால் பேருந்துகளுக்கு நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டி உள்ளது. எனவே, கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மக்கள் கூறியது: "உத்தமபாளையம் - தேவாரம் இடையே காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.

நகரப் பேருந்துகளைத் தவிர பிற தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் அனைத்து ஊர்களிலும் நிற்பதில்லை. இதனால் நகரப் பேருந்துகளில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருப்பதால் இந்த வழித்தடத்தில் கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்.

மேலும், கம்பம்,போடி மற்றும் தேவாரம் பணிமனைகள் மூலமாக உத்தமபாளையம் - தேவாரம் வழித்தடத்தில் கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.