திருப்பூர்

கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று திருப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினர்.

தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை குழியில் புதைக்கும் ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன போராட்டம் நடைப்பெற்றது.

திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று மாலை நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

“கல்வியைப் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவந்து மாநில உரிமைகளை நிலை நிறுத்த வேண்டும்.

‘நீட்’ தேர்வுக்கு தமிழக அரசு அளித்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து நிரந்தர விலக்கை பெற்றுத்தர வேண்டும்.

மருத்துவ மேற்படிப்புக்கு மாநில அரசு வழங்கும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைபிடிக்க மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும்” என்றக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைப்பெற்றது.

மாணவர் பாசறையைச் சேர்ந்த தமிழ் சேக் கோரிக்கைகள் குறித்துப் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்தபோதிலும் மழையில் நனைந்தபடி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தனர்.