We have applied for a job for the government and sent us without any reason - the transgender petition to the governor ...

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அங்கன்வாடி பணிகளுக்கு விண்ணப்பித்த திருநங்கைகளின் மனுவை எந்தவித காரணமும் சொல்லாமல் நேர்முகத் தேர்வில் இருந்து அனுப்பி விட்டதால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது.

இதற்கு மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) வீரப்பன் தலைமை வகித்தார். அவர் மக்களிடம் இருந்து ஏராளாமனா மனுக்களைப் பெற்று அவற்றிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதில், திருச்செந்தூர் தோப்பூரைச் சேர்ந்த திருநங்கை விஜி மற்றும் சில திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “நாங்கள் கடந்த 28.8.2017 அன்று அங்கன்வாடி உதவியாளர் பணிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, குழந்தை வளர்ப்புத் திட்ட அலுவலரிடம் கொடுத்தோம்.

அந்தப் பணிக்கான நேர்முக தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. அந்த தேர்வுக்கு எங்களுக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை. இதுகுறித்து நாங்கள் வழங்கிய கோரிக்கை மனுவிற்கு எந்தவித பதிலும் தராமல் திருநங்கைகளை இந்த பணிக்கு தேர்வு செய்ய முடியாது என கூறி எங்களை அனுப்பிவிட்டனர்.

எங்களுக்கு அரசு வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பினர் கொடுக்க மனுவில், “மியான்மர் நாட்டில் ரஹானே மாகாணத்தில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்த நாட்டு ராணுவம் ஈவு இரக்கம் இன்றி செய்யும் சித்ரவதையையும், இன படுகொலையையும் மத்திய அரசு கண்டிக்க வேண்டும்.

மேலும், மியான்மரில் இருந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்த முஸ்லிம் மக்களை திருப்பி அனுப்பும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.

மியான்மர் பிரச்சினை முடியும் வரை இந்தியாவில் தங்கி இருக்கும் மியான்மர் முஸ்லிம்களை திருப்பி அனுப்பக் கூடாது என்ற கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டுச் செல்ல வேண்டும்” என்று அதில் கூறியிருந்தனர்.

திருவைகுண்டம் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் விவசாய நிலம், குடியிருப்புப் பகுதிகளில் நிலத்தடி நீர் திருட்டு நடந்து வருகிவதால் நிலத்தடி நீர் முற்றிலும் குறைந்துவிட்டது. விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கேள்விக்குறியாகி உள்ளது.

மாவட்டத்தில் நிலத்தடி நீர் மற்றும் குவாரிகளில் இருந்து நீர் திருடும் தனியார் தொழிற்சாலைகளை கண்டறிந்து அவர்களிடம் இருந்து மாவட்ட நிர்வாகம் அபராதம் வசூலிக்க வேண்டும்.

நிலத்தடி நீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

மற்றொரு மனுவில், தூத்துக்குடி பிரையண்ட் நகர் 12-வது தெருவை சேர்ந்த மக்கள், “நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக தூத்துக்குடி பிரையண்ட் நகர் 12-வது தெரு மேற்கு குருவி மேடு பகுதியில் வசித்து வருகிறோம்.

இந்தப் பகுதியில் 23 குடும்பங்கள் உள்ளன. ஆனால் எங்களுக்கு மின் இணைப்பு இதுநாள் வரை வழங்கப்படவில்லை. இதனால் எங்கள் பகுதியைச் சேர்ந்த பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், கல்லூரி மாணவ-மாணவிகள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே மாணவர்கள் நலன் கருதி எங்களுக்கு மின் இணைப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.