வேலூர்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டது வரவேற்கத்தக்கது என்றும் அவர்களை நாங்கள் எதிராளிகளாக பார்க்கவில்லை என்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில், அடுத்த மாதம் செப்டம்பர் 9–ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதனையொட்டி வேலூர் கோட்டை மைதானத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டமும் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியது:

“எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைவது குறித்து ஓரிரு நாட்களில் நல்ல செய்தி அறிவிக்கப்படும்.

அதிமுக ஆட்சி இன்னும் நான்கு ஆண்டுகள் நீடிக்கும். மக்கள் அன்பை பெறவே அணிகள் இணைக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பங்கேற்றது வரவேற்கத்தக்கது. நாங்கள் அவர்களை எதிராளிகளாக பார்க்கவில்லை.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆசைப்படி மாவட்ட தலைநகரங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வேலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக கொண்டாட உள்ளோம்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவருடனும் ஒருங்கிணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். மக்களின் ஆதரவோடு விழா நடைபெற உள்ளது” என்று அவர் கூறினார்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்பு அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியது:

“மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம், அவரது நினைவாக நினைவு இல்லமாக்கப்படும். வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அரசு எடுத்து வருகிறது’’ என்றார்.

விழாவில் பங்கேற்ற டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ஜெயந்திபத்மநாபன் (குடியாத்தம்) செய்தியாளர்களிடம் கூறியது:

“பொதுச்செயலாளர் சசிகலா ஆலோசனையின்படி, டி.டி.வி.தினகரன் கூறியதன்பேரில் தான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். சசிகலா பிறந்த நாளில் அவரை நான் சந்தித்தேன். அப்போது, சசிகலா கூறுகையில், ‘‘நான் வெளியே வரும் வரை ஆட்சியை கலைத்து விடக் கூடாது. ஆட்சியை தொடர ஒத்துழைப்பு தர வேண்டும். நான் வரும் வரை பொறுமையாக இருங்கள்’’ என்றார்.

அதிமுகவில் மூன்று அணிகள் என்பது கிடையாது. இரண்டு அணிகள் மட்டுமே உள்ளன. சசிகலா தலைமையிலான டி.டி.வி.தினகரனின் ஒரு அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மற்றொரு அணியும்தான் உள்ளன.

முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு என தனி அணி இல்லை. பொதுச் செயலாளர் சசிகலாவால், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நியமிக்கப்பட்டவர்’’ என்றார்.