வேலையில் நெருக்கடி கொடுப்பதை நிறுத்தக்கோரி கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கோவை மாவட்ட பிரிவு சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று காலை போராட்டம் நடைப்பெற்றது.

இந்த போராட்டத்திற்கு மாவட்ட சங்க தலைவர் கே.முருகேசன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் ஆர்.முத்துராஜ் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க தலைவர் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினார்.

இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு ஏற்பட்டுள்ள பணி நெருக்கடிகளை களைய வேண்டும் என்று முழக்கமிட்டனர்.

இந்த போராட்டம் குறித்து சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூறியத்கு:

“ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஊழியர்களின் உரிமையை ஓராண்டுக்கு மேலாகியும் தர முடியவில்லையே? என்று நிர்வாகம் கவலைப்படவில்லை. உண்மை நிலையை மறைக்க முடியாத நிர்வாகம் ஊழியர்களை அவதிப்படுத்துவதிலும், துன்பப்படுத்துவதிலும், அவர்களது சிரமங்களை கண்டு ரசிப்பதிலும் குறையவில்லை.

குறிப்பாக ஒரே படிவத்தை ஒரே நாளில் மாற்றி, மாற்றி கேட்டு துன்புறுத்துவது,

4 மணிக்கு படிவத்தின் வடிவத்தை இ–மெயிலில் அனுப்புவது, அதே படிவத்திற்கு 6 மணிக்குள் பதில் கோருவது,

கணினியின் வேகத்தை கூட்ட பலமுறை முறையிட்டும் எந்த முயற்சியும் எடுக்காததால் பெண் ஊழியர்கள் இரவு நேரங்களிலும் பணிபுரியும் நிலை உருவாகி உள்ளது.

சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதியில் இருந்து, குடிநீருக்கான போதுமான நிதி ஒதுக்குவது இல்லை. ஆனால் 14–வது நிதிக்குழுவின் நிதியில் இருந்து மின்சாரத்துக்கும், குடிநீருக்கும், பணத்தை செலவழிக்க நிர்ப்பந்திக்கின்றனர்.

இதுதவிர வறட்சி நிவாரண திட்டத்துக்கு எந்த பணமும் கொடுக்காமல் ஊராட்சியில் புள்ளி விவரங்களை திரும்ப, திரும்ப கேட்கின்றனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு போதுமான நிதி ஒதுக்குவதில்லை.

பதிவேடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி உள்ளனரே தவிர, எளிமைப்படுத்துவதற்கு வழி செய்வதில்லை.

மேலும் நிதியே ஒதுக்காமல் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பது முள்ளாக குத்துவது போன்றதாகும்.

இதுபோன்று, பணியில் நெருக்கடி கொடுப்பதை நிறுத்தக்கோரி ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துகிறோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.