Asianet News TamilAsianet News Tamil

எங்களுக்கும் ஒரு கோரிக்கை இருக்கு? பள்ளி சீருடையில் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட மாணவர்கள்...

we also have a request? Students gathered at collector office in school uniform ...
we also have a request? Students gathered at collector office in school uniform ...
Author
First Published Jul 10, 2018, 8:49 AM IST


கரூர்
 
பள்ளி சீருடையில் மாணவ - மாணவிகள் கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களது கோரிக்கை குறித்த மனுவை கிராம மக்கள் ஆட்சியரிடம் வழங்கினர். 

கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. 

இதில், குடிநீர் பிரச்சனை, தெருவிளக்கு பிரச்சனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் வேலைவாய்ப்பு உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள், ஆட்சியர் அன்பழகனிடம் கொடுத்தனர். 

மொத்தம் 314 மனுக்களை பெற்றுக்கொண்ட  ஆட்சியர், இமனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுகுறித்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தொடர்புடைய துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கரூர் மாவட்டம், மணவாடி, பெரியார் காலனி, பிஸ்மி காலனி, ஐயம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவ - மாணவிகளை அழைத்து கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் கூடினர். 

அவர்கள் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், "எங்களது குழந்தைகள் ஐயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். எங்கள் ஊரிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவு நடந்துதான் பள்ளிக்கு செல்ல வேண்டும். 

இதற்கிடையே உள்ள இரயில்சாலை பகுதியில் நடமாடும் சிலர், மாணவிகளை கேலி செய்வதும், கடத்தி விடுவோம் என்று மிரட்டுவதும் என அச்சுறுத்தி வருகின்றனர். 

எனவே, பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக செல்ல அரசு பேருந்தினை மணவாடி ஊரிலிருந்து ஐயம்பாளையத்துக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர். 

முன்னதாக குழந்தைகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு கிராம மக்கள் அழைத்து வந்ததும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கரூர் துணை காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா குழந்தைகளை ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள்? என்று கேட்டார். 

அதற்கு கிராம மக்கள் இவர்களுக்காகதான் வந்திருக்கிறோம் என்று தங்களது கோரிக்கையை தெரிவித்தனர். அதனை கேட்ட பின்பு காவல் கண்காணிப்பாளர், "இனி இதுபோன்று பள்ளி படிப்பை கெடுத்து குழந்தைகளை இங்கு அழைத்து வர வேண்டாம்" என்று எச்சரித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios