விருதுநகர்

திருவில்லிபுத்தூர் நகராட்சிக்கு 20 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருவது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வழங்கிட போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சந்திரபிரபா எம்.எல்.ஏ. உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் மற்றும் செண்பகத்தோப்பு பகுதியில் இருந்து நான்கு நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 20 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்படுகிறது.

மேலும், பருவமழை இரண்டு ஆண்டுகளாக பொய்த்ததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. இதனால் மற்ற அடிப்படை உபயோகத்துக்கும் தண்ணீர் கிடைக்காமல் அனைவரும் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் திருவில்லிபுத்தூர் நகராட்சி அதிகாரிகளுடன் சந்திரபிரபா எம்.எல்.ஏ. குடிநீர் வினியோகம், சுகாதாரப் பணிகள், தெரு விளக்கு பராமரிப்பு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதில் நகராட்சி ஆணையாளர் முகமது முகைதீன், பொறியாளர் ராமலிங்கம், நகரமைப்பு அலுவலர் மதியழகன், குடிநீர் வினியோக மேற்பார்வையாளர்அழகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

அப்போது, “தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து கூடுதல் தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். 20 நாள்களுக்கு ஒருமுறை வரும் குடிநீரை சேமித்து வைத்துப் பயன்படுத்துவதால் நோய் பரவும் அபாயம் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும், “வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வழங்கிட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்” என்றும் அவர் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் நகரில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.