Asianet News TamilAsianet News Tamil

கேரளாவுக்கு வழங்கும் தண்ணீரை உடனே நிறுத்த வேண்டும் - அரசை வலியுறுத்தும் தமிழக விவசாயிகள்...

Water should be stopped immediately to Kerala - Tamil Nadu farmers urging Government
Water should be stopped immediately to Kerala - Tamil Nadu farmers urging Government.
Author
First Published Feb 28, 2018, 10:24 AM IST


கோயம்புத்தூர்

ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு வழங்கும் தண்ணீரை உடனே நிறுத்த வேண்டும் என்று கோவை பி.ஏ.பி. அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டுச் செல்லப்படுகிறது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3 இலட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதனை தவிர குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிற நிலையில் முதலாம் மண்டல பாசனத்தில் முதல் சுற்றுக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நேற்றுடன் நிறுத்தப்பட்டது.

இரண்டாவது சுற்று தண்ணீர் திறக்க அரசாணையும் பெறப்பட்டது. இதை நம்பி குண்டடம், ஜே.கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வெங்காயம் சாகுபடி செய்து விட்டனர்.

மற்றப் பகுதிகளில் காய்கறி, மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்ய நிலத்தை உழுது தயார் நிலையில் வைத்து உள்ளனர்.

இதனை தவிர நீண்டகால பயிரான தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி கேரளாவில் ஜனதா தள கட்சியினர் தமிழக சரக்கு வாகனங்களை மறித்து கடந்த 22-ஆம் தேதி இரவு முதல் போராட்டம் நடத்தினார்கள்.

மேலும, கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள் கோவை நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் அவசரகால மதகுகளை திறந்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து தண்ணீர் வீணாக ஆற்றில் சென்றது.

இதையடுத்து தமிழக அதிகாரிகள், கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின், சிறுவாணி அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேலும் பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு முதலாம் மண்டல பாசனத்திற்கு சென்ற தண்ணீரை நிறுத்தி, ஆழியாறு அணைக்கு திறந்து விட்டனர்.

தற்போது ஆழியாறு அணையில் இருந்து வினாடிக்கு 450 கன அடி தண்ணீர் கேரளாவுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் முதலாம் மண்டல பாசனத்தில் 2-வது சுற்று தண்ணீர் மூலம் பயன்பெறும் 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கேரளாவுக்கு திறக்கும் தண்ணீரை நிறுத்தக் கோரியும், பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரியும் திருமூர்த்தி நீர்தேக்க பாசன விவசாயிகள் பொள்ளாச்சியில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்தை நேற்று காலை 10 மணிக்கு முற்றுகையிட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு பாசனத் திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் தலைமை தாங்கி பேசினார்.

இதனைத் தொடர்ந்து கேரளாவுக்கு வழங்கும் தண்ணீரை நிறுத்த கோரி, தமிழக அரசை வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மதியம் 12 மணிக்கு கண்காணிப்பு பொறியாளர் கலைமாறனிடம், திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் மற்றும் விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது.

அப்போது விவசாயிகள், "பி.ஏ.பி. திட்டத்தில் முடிவு எடுக்கின்ற அதிகாரம் கண்காணிப்பு பொறியாளருக்கு தான் உள்ளது. நீங்கள் தான் அரசிடம் எடுத்து கூற வேண்டும்" என்றனர்.

அதற்கு கண்காணிப்பு பொறியாளர், "அரசிடம் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு வந்தது. அதன்பேரிலே தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீரை நிறுத்த உத்தரவு வந்தால் நிறுத்தப்படும்" என்றார்.

இதனால் முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. மேலும் "பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். இங்கேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் மதிய உணவு தயார் செய்து பி.ஏ.பி. அலுவலகத்துக்கு எடுத்து வந்தனர். அந்த உணவு அங்கேயே விவசாயிகளுக்கு பரிமாறப்பட்டது. இதனை தொடர்ந்து 2-வது கட்ட, 3-வது கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. இதனால் விவசாயிகள் தங்களது சட்டையை கழற்றிவிட்டு, அரை நிர்வாண போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையில் சென்னையில் இருந்து பொதுப்பணித்துறை செயலாளர், தொலைபேசியில் முதலமைச்சர் முன்னிலையில் நாளை (இன்று) இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று கூறியதாக விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ஆலோசனை நடத்திய விவசாயிகள், முதல்-அமைச்சர் முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், மெடிக்கல் பரமசிவம் தலைமையில் 10 பேர் கொண்ட விவசாய பிரதிநிதிகள் குழுவினர் கலந்து கொள்வது என்று முடிவு செய்தனர்.

அதன் பின்னர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலைந்து சென்றனர். போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிவரை நடந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios