காற்றில் இருந்து குடிநீர் தயாரித்து பயணிகளுக்கு வழங்கும் திட்டம் மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

காற்றில் இருந்து குடிநீர் தயாரித்து பயணிகளுக்கு வழங்கும் திட்டம் மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம், ஆலந்தூர் மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களில் காற்றை குடிநீராக மாற்றும் வளிமண்டல நீர் ஜெனரேட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. நகரத்தில் உள்ள அனைத்து 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும், பயணிகளுக்கு குடிநீர் விநியோகிக்க ரிவர்ஸ் சவ்வூடுபரவல் தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் திறக்கப்பட்ட விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள மூன்று வசதிகளில் காற்றை குடிநீராக மாற்றும் வசதியும் ஒன்றாகும். இதுகுறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், எங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக இது போன்ற மூன்று ஜெனரேட்டர்களை மூன்று ரயில் நிலையங்களில் நிறுவினோம். இது நாங்கள் நிறுவிய புதிய தொழில்நுட்பம் ஆகும்.

பயணிகளிடம் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு முன்பு, இதன் செயல்திறனை சரி பார்ப்பதற்காக தொடர் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஜெனரேட்டர்கள் காற்றில் இருந்து ஈரப்பதத்தை பெறுகின்றன. பின்னர் மின்தேக்கி வழியாக ஈரப்பதமானது நீர் துளிகளாக மாறி பிரத்யேக டேங்க்கில் சேகரிக்கப்படுகிறது. இந்த டேங்கில் இருந்து மற்றொரு டேங்க்கிற்கு மாற்றப்படுவதற்கு முன்பு நான்கு கட்டங்களாக சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் தண்ணீர் சாதாரண மற்றும் குளிர்ச்சியான முறையில் பயணிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இதையடுத்து, பயணிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு பிற நிறுவனங்களை, மெட்ரோ ரயில்வே நிறுவனம் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. காற்றில் இருந்து குடிநீராக மாற்றும் ஜெனரேட்டர்கள் அமைப்பதற்கு குறைவான இடம் மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் இந்த வசதியினை மற்ற ரயில்நிலையங்களில் நிறுவுவதற்கு செலவு குறைவாக இருக்குமா என்பதை நாம் பார்க்க வேண்டும். மற்ற ரயில்நிலையங்களில் இந்த வசதியை ஏற்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என்று தெரிவித்தார். முன்னதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் பாலூட்டும் தாய் மார்களுக்கான தனி அறை மற்றும் நகரும் படிக்கட்டு உள்ளிட்ட வசதிகள் தொடங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.