water level of Sathanur dam is 18 feet in eight days
திருவண்ணாமலை
தொடர் மழையால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் எட்டு நாள்களில் 18 அடி உயர்ந்துள்ளது. இதனால் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் கிராமத்தில் காமராசர் ஆட்சிக் காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது.
இந்த அணையில் தேங்கும் தண்ணீர் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
சாத்தனூர் அணையின் நீர்மட்ட உயரம் 119 அடி. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 7 ஆயிரத்து 321 மில்லியன் கன அடி.
தமிழகம் முழுவதும் சமீபக் காலமாக தொடர் மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி.அணை நிரம்பியது. எனவே, அந்த அணையில் இருந்து தென்பெண்ணை ஆறு வழியாக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் திருவண்ணாமலை மாவட்டம், நீப்பத்துரை வழியாக சாத்தனூர் அணைக்கு வருகிறது.
செப்டம்பர் 3-ஆம் தேதி சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 75.35 அடியாகவும், அணையின் நீர் கொள்ளளவு ஆயிரத்து 172 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்தவண்ணம் உள்ளதால் 8 நாள்களில் அணையின் நீர்மட்டம் 18 அடி உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.80 அடியாகவும், அணையின் நீர் கொள்ளளவு 2 ஆயிரத்து 782 மில்லியன் கன அடியாகவும் உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 2 ஆயிரத்து 303 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
சாத்தனூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரம் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
