Asianet News TamilAsianet News Tamil

ஜன.1 முதல் உயர்கிறது தண்ணீர் கேன் விலை... அறிவித்தது குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம்!!

ஜனவரி 1 ஆம் தேதி முதல் குடிநீர் கேன் விலை உயர்த்தப்படுவதாக செங்குன்றம் பகுதி குடிநீர் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

water cane manufacturers hikes water cane and bottles price
Author
Redhills, First Published Dec 26, 2021, 3:46 PM IST | Last Updated Dec 26, 2021, 3:46 PM IST

ஜனவரி 1 ஆம் தேதி முதல் குடிநீர் கேன் விலை உயர்த்தப்படுவதாக செங்குன்றம் பகுதி குடிநீர் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரும்பாலானோர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேனை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஏராளமானவை ஐ.எஸ்.ஐ தரச்சான்று பெறாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த ஆலைகளுக்கு அரசு சீல் வைத்தது. இருப்பினும் முறைகேடாக பல ஆலைகள் இயங்கி வருவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனிடையே, கொரொனாவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

water cane manufacturers hikes water cane and bottles price

மேலும் தற்போது புத்தாண்டையொட்டி பொருட்களின் விலை உயர உள்ளது. அந்த வகையில் பாட்டில் மற்றும் கேன் தண்ணீரின் விலை உயர்கிறது. இந்த நிலையில், ஜனவரி 1 ஆம் தேதி முதல் குடிநீர் கேன் விலை உயர்த்தப்படுவதாக செங்குன்றம் பகுதி குடிநீர் உற்பத்தியாளர்கள் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதுக்குறித்து திருவள்ளூர் மாவட்டம் ரெட்ஹில்ஸை சேர்ந்த குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், மூலப்பொருட்கள் விலை உயர்வால் வரும் ஒன்றாம் தேதி முதல் தண்ணீர் கேன் விலை உயர்த்தப்படுகிறது. 300, 500 மில்லி, 2 மற்றும் 5 லிட்டர் கேன் பெட்டிகள் தலா 10 ரூபாயும், 20 லிட்டர் கேன்கள் மீது 2 ரூபாயும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜி.எஸ்.டி, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

water cane manufacturers hikes water cane and bottles price

மேலும், கடந்த சில மாதங்களாக தக்காளி, கத்திரிக்காய், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக நடுத்தர குடும்பத்தினர் செய்வதறியாமல் தவித்து வரும் நிலையில், தற்போது குடிநீர் கேன் விலை உயர்வு என்ற அறிவிப்பு பேரிடியாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பை அடுத்து மற்ற பகுதி உற்பத்தியாளர்களும் விலையை ஏற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களைத் தொடர்ந்து கேன் விற்பனை செய்யும் விநியோகஸ்தர்களும் கடைக்காரர்களும் விலையை உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் காரணம் காட்டி அதிக விலையில் விநியோகஸ்தர்கள் விற்கலாம் என பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர். ஆகவே பாட்டில் மற்றும் கேன் தண்ணீரின் விலையின் அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios