திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் அஸ்திவாரம் தோண்டும்போது மடத்தின் சுவர் இடிந்துவிழுந்ததில் பெண் உள்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த இருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், திருவூடல் தெருவைச் சேர்ந்தவர் பார்வதியம்மாள். இவருக்கு சொந்தமான இடம் திருவூடல் தெருவில் உள்ள பில்லூர் மடத்தின் அருகில் உள்ளது. இந்த இடத்தினை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சீனிவாசன் என்பவர் வாங்கினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. அங்கு, திருவண்ணாமலை கோரி மேட்டு 4-வது தெருவைச் சேர்ந்த ஆபித் உசேன் (22), சோமாசி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி பூங்காவனம் (45), எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (22), நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மனைவி அல்லி என்கிற அலமேலு (50), தென்மாத்தூர் பகுதியை சேர்ந்த இலட்சுமணன் (35) ஆகியோர் வேலை செய்துக் கொண்டிருந்தனர்.

இந்த இடத்தின் ஒரு பக்கத்தில் பில்லூர் மடத்தின் ஒரு பகுதி சுவர் உள்ளது. இது மிகவும் பழமையான மடமாகும். இந்த மடத்தின் பக்க சுவர் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. அஸ்திவாரம் தோண்டும்போது சீனிவாசனின் இடத்திற்கு ஏற்ப ஐந்து பேரும் பில்லூர் மடத்தின் சுவர் மற்றும் அந்த இடத்தை சமன் செய்யும் வேலையில் நேற்று ஈடுபட்டனர்.

அப்போது காலை 11.30 மணி அளவில் திடீரென பில்லூர் மடத்தின் ஒரு பக்க சுவர் பயங்கர சத்தத்துடன் இடிந்து வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் ஐந்து பேரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை நகர, கிழக்கு காவலாளர்கள் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர்கள், வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர் வந்தனர். அவர்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி இருந்த ஆபித்உசேன், பூங்காவனம், ரமேஷ், அலமேலு ஆகியோரை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ், அலமேலு ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆபித்உசேன் மற்றும் பூங்காவனம் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருந்த இலட்சுமணனை மீட்க முடியவில்லை.

இதனையடுத்து பொக்லைன் எந்திரம், லாரிகள் வரவழைக்கப்பட்டன. பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் இடிபாடுகளில் இருந்த மண் மற்றும் கற்கள் கொஞ்சம், கொஞ்சமாக அகற்றும் பணி நடைபெற்றது. சுமார் 1½ மணி நேரத்திற்கு பிறகு இடிபாடுகளில் சிக்கி இருந்த இலட்சுமணனை பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் தலைமறைவாக உள்ள இடத்தின் உரிமையாளர் மருத்துவர் சீனிவாசன், கட்டுமான பணியை ஒப்பந்தம் எடுத்த மணிகண்டன், மேற்பார்வையாளர்கள் ஆபித்உசேன் (சிகிச்சை பெற்று வருபவர்), பிரகாஷ் ஆகிய நால்வர் மீது காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.