நெல்லை சாஃப்டர் பள்ளி கழிவறை கட்டடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நெல்லை டவுன் எஸ்.என்.ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்தப் பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து தற்போது மாணவர்கள் நேரடியாக சென்று கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வழக்கம்போல மாணவர்கள் பள்ளிக்கு சென்றபோது காலை 11 மணியளவில் இடைவேளை நேரம் வந்தது. அப்போது மாணவர்கள் கழிவறைக்கு செல்லத் தொடங்கினர். அப்போது திடீரென கழிவறையின் தடுப்புச் சுவர் இடிந்து அங்கு நின்ற மாணவர்கள் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த சக மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் சிக்கி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றொரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 4 மாணவர்கள் காயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

நெல்லையில் அரசு உதவி பெறும் பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த துயர சம்பவத்தையடுத்து, உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா பத்து லட்சம் ரூபாயும், காயமுற்ற நான்கு மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட அவர் உத்தரவிட்டுள்ளார். 

விபத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதனிடையே பள்ளியில் இன்று காலை கழிப்பறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 9-ஆம் வகுப்பு மாணவர் அன்பழகன், 8ஆம் வகுப்பு மாணவர் விஷ்வ ரஞ்சன், 6ஆம் வகுப்பு மாணவர் சுதீஸ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அவர்களது விவரங்களை பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.