Asianet News TamilAsianet News Tamil

வாக்களிப்பது என்பது ஜனநாயகத்திற்கு அளிக்கும் முதல் முத்தம்... மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து!!

வாக்களிப்பது என்பது ஜனநாயகத்திற்கு அளிக்கும் முதல் முத்தம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

voting is the first kiss of democracy says kamalhaasan
Author
First Published Sep 15, 2022, 11:48 PM IST

வாக்களிப்பது என்பது ஜனநாயகத்திற்கு அளிக்கும் முதல் முத்தம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரியில் நடந்த என் ஐடி பெஸ்ட் என்ற பெயரில் கலை நிகழ்ச்சி நடந்தது. அதில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் நிகழ்வு நடந்தது.  மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் கேள்விகளை கமல்ஹாசனிடம் கேட்டனர். ஒவ்வொரு கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். அப்போது, வெற்றி தோல்வி இரண்டும் எனக்கு ஒன்று தான். வெற்றி பெற்ற படங்களுக்கும் நான் உழைத்துள்ளேன், தோல்வி அடைந்த படங்களுக்கும் நான் உழைத்துள்ளேன். நான் ஜோக் அடித்து அது உங்களுக்கு புரியவில்லை என்றால் அது உங்களுக்கு தோல்வி, அதற்கு நீங்கள் சிரித்தால் அது நமக்கு வெற்றி. எனக்கு கே.பாலசந்தர் போன்ற நல்ல ஆசிரியர்கள் எனக்கு கிடைத்தார்கள். நான் ஒரு பெண்ணை காதலிப்பதற்கு நான் எஸ்.பி.பி பாடலை தான் பாடினேன். வாலி பிறரின் பலத்தை வாங்கி கொள்பவர். இவர்களை போன்றோரால் நானும் கவிஞனாகும் தகுதி கொண்டேன். எஸ்.பி.பி, இளையராஜா போன்றோரை நான் நண்பர்கள் என நினைத்து கொண்டேன் ஆனால் அவர்கள் என் குருமார்கள் என்றார். தொடர்ந்து கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், முக்கிய 5 புத்தகங்கள் என நான் பரிந்துரைக்க முடியாது.

இதையும் படிங்க: நெல்லையில் குவாரி மணல் கடத்தல் வழக்கில் திமுக எம்பி மகன் கைது..?

இன்றுவரை நான் படித்த புத்தகங்களில் ஐந்து சிறந்த புத்தகங்கள் இருக்கலாம் நாளை வேறு ஐந்து புத்தகங்களை நான் படித்தால் அதை விட அது சிறப்பானதாக இருக்க கூடும். ஒருவருக்கு 5 ரூபாய் சம்பளம் வேண்டுமா 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வேண்டுமா என கேட்டால் எல்லோரும் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் தான் வேண்டும் என்பார்கள் அது போல தான் 5 புத்தகங்கள் மட்டுமல்ல பல புத்தகங்களை படிக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்னால் என்னிடம் சினிமாவின் எதிர்காலம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது நான் திரையரங்குகள் இருக்கும் ஆனால் அது கோலோச்சாது தொலைக்காட்சிகள் வரும் திரைக்கூட இல்லாமல் ஆகும் என்றேன். அது தற்போது நடக்கிறது. இன்னும் விரைவில் நானோ தொழில்நுட்பத்தில் சினிமா பார்க்கும் காலம் வரும். ஓ.டி.டி வந்தால் திரையரங்கு அழிந்து விடுமா என்று கேட்டால் அது இல்லை என்று தான் கூற வேண்டும். தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் தற்போது இருக்கும் திரையரங்கு உள்ளிட்டவையும் தொடர்ந்து கொண்டு  தான் இருக்கும். ஏ.சி வந்தாலும் இயற்கையான குளிர்ச்சி காற்றை நாம் சுவாசித்து கொண்டு தான் இருக்கிறோம் அது போல தான். நடனமாக இருந்தாலும் சரி பொறியியலாக இருந்தாலும் சரி பயிற்சி அவசியம். தேவர் மகன் படத்தை ஒரு வாரத்தில் எழுதினேன். அதற்கு காரணம் பயிற்சி தான். ஒரு துறையில் சாதிக்க  கடுமையான பயிற்சி அவசியம் என்றார்.

இதையும் படிங்க: நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் இதுதான்… விளக்கம் அளித்த இன்னோசன்ட் திவ்யா!!

தொடர்ந்து அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த கமல், அரசியல் என்பது உங்கள் கடமை அது தொழில் அல்ல. வாக்கு அளிக்க வயது வந்தும் பலர் வாக்காளர் பட்டியலில் பெயர் கூட சேர்க்காமல் இருக்கின்றீர்கள். முதலில் வாக்களிக்க வயது வந்தால் வாக்காளர் பட்டியலில் பெயரை முதலில் சேருங்கள்.  வாக்களிப்பது ஜனநாயக கடமை. ஜனநாயக கடமையாற்றவில்லை என்றால் கேள்வி கேட்க உங்களுக்கு அருகதை இல்லை என்று அர்த்தம். ஜனநாயகத்தை நாம் விழிப்போடு பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும். நம் கடமையை நாம் செய்யவில்லையென்றால் ஜனநாயகம் என நாம் நம்பி கொண்டிருக்கும் பலம் திருடர்கள் கையில் தான் இருக்கும். தேர்தலில் வாக்களிப்பது என்பது ஜனநாயகத்திற்கு கொடுக்கும் முதல் முத்தம்.  முதல் காதல் போனது. அந்த முத்தம் கொடுத்தால் தான் ஜனநாயகத்துடன் குடும்பம் நடத்த முடியும். எனவே அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார். இறுதியாக  பேசிய அவர் அனைவரும் பொறியியல் படித்து வருகின்றீர்கள். நீங்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமான பொறியாளராக உருவாக வேண்டும். பின்லேடனும் பொறியாளர் தான் ஆனால் அவர் அழிக்கும் பொறியாளர் அது போல் நம் கல்வி இருக்க கூடாது. நீங்கள் கற்பது ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு பயன்பட வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் என்.ஐ.டி இயக்குனர் அகிலா, பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios