திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஆயுத பூசை கொண்டாட்டத்தையொட்டி வாக்காளர் அடையாள அட்டைகளை, பழைய குப்பைகளாக குப்பைத் தொட்டியில் வீசியது பொதுமக்கள் மற்றும் அலுவலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலகம் இயங்கி வருகிறது. வட்டாட்சியர் அலுவலகங்களில் தங்களுக்குத் தேவையான வாக்காளர் அடையாள அட்டை கேட்டு கிடைக்காதவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் விண்ணப்பிக்கின்றனர். அவர்களுக்காக அச்சிடப்பட்டு, அதை வாங்க வராதவர்களின் அட்டை மற்றும் தவறாக அச்சிடப்பட்ட அட்டை என அனைத்தையும் குப்பையாகக் கருதி அலுவலகத்தில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் ஆயுத பூசை கொண்டாட்டத்துக்காக அலுவலகத்தை சுத்தப்படுத்தினர். அப்போது அங்கு குப்பையாக கிடந்த வாக்காளர் அடையாள அட்டைகளை வெளியில் வீசியுள்ளனர்.

இதை பார்த்த பிற துறை அலுவலர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விண்ணப்பித்து பல ஆண்டுகளாக வாக்காளர் அடையாள அட்டைக்கு அலைந்து திரிந்து வரும் நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இதுபோன்று குப்பையில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநிலத் தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.