எத்தனை தடைகள் வந்தாலும் அதை தகர்த்தெறிந்து புதிய நடிகர் சங்க கட்டடம் கட்டப்படும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தில்33 அடி பொது சாலைப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் சார்பில் ஸ்ரீரங்கன் என்ற வழக்கறிஞர் சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸில் புகார் மனு அளித்திருந்தார்.

இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதைதொடர்ந்து, இதுகுறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் போதிய அவகாசம் கொடுத்தும் மனுதாரர் தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என கூறி தடையை நீக்கி உத்தரவிட்டனர்.

மேலும் இதுகுறித்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், எத்தனை தடைகள் வந்தாலும் அதை தகர்த்தெறிந்து புதிய நடிகர் சங்க கட்டடம் கட்டப்படும் என தெரிவித்தார்.