விருதுநகர் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், கைதான 4 பேர்களிடம் விசாரணை நிறைவடைந்தது. 7 நாட்கள் சிபிசிஐடி காவல் நிறைவு பெற்றதை அடுத்து நான்கு பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

விருதுநகரில் பட்டியிலனத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலிப்பதாக கூறி தனிமையில் இருப்பதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஹரிஹரின்,ச்ஜூனத்அகமது, பிரவீன், மாடசாமி மற்றும் 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டினர். இதனையடுத்து சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும். விரைந்து தண்டனை வாங்கி கொடுப்பதில், தமிழ்நாட்டிற்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருப்போம் என்று கூறினார்.

தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தலைமையிலான குழு விசாரணையில் இறங்கியது. முதலில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் 2 நாள்கள் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கைதான 8 பேரின் வீடுகள் மற்றும் சம்பவ நடந்த இடங்களிலும் சோதனையை சிபிசிஐடி போலீசார் நடத்தினர். 

மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேர்களிடம் விசாரணை நடத்த, 4 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து சிபிசிஐடி மனுதாக்கல் மீதான விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹரிஹரன், ஜூனத் அகமது, பிரவீன், மாடசாமி ஆகிய நான்கு பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டு, விசாரணை நடைபெற்ற நிலையில் நான்கு பேருக்கும் 7 நாட்கள் சிபிசிஐடி காவல் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து நால்வரும் விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து நான்கு பேரையும் சம்பவம் நடந்த மருந்து குடோனுக்கு நேரில் அழைத்து வந்து டிஎஸ்பி வினோதினி தலைமையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே இன்று ஏழு நாள்கள் காவல் நிறைவடைந்ததையடுத்து, நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நால்வரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஸ்ரீவல்லி புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, 4 மாணவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். வழக்கில் கைப்பற்றப்பட்ட செல்போன், மெமரிகார்டு, லெப்டாப் ஆகியவற்றை ஆய்வு செய்து அவர்களின் பேஸ்புக், வாட்ஸ் அப், டெலிகிராம் ஆகிய சமூகவலைதள பக்கங்களின் குழுக்களில் இடம்பெற்றவர்களிடமும் விசாரணை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்கள், உரையாடல்கள் உள்ளிட்டவை குறித்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் மீட்பது குறித்து விசாரணை நடத்தவும் சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.