கும்பகோணத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட இரண்டு தங்கும் விடுதிகள், இரண்டு வணிக வளாகங்களுக்கு நகராட்சி மற்றும் உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் நேற்று அதிரடியாக சீல் வைத்தனர்.
கும்பகோணத்தில் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் கட்டடங்களோ, வணிக வளாகங்களோ அல்லது விடுதிகளோ கட்டப்படக்கூடாது என்ற விதி நிலுவையில் இருக்கிறது.
இந்த நிலையில் கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜான் செல்வராஜ் நகரில் இரண்டு தனியார் தங்கும் விடுதிகள் எவ்வித அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் கட்டப்பட்டிருந்தது.
இதில் ஒரு விடுதி 4 மாடி கட்டடம் கொண்டதாகவும், மற்றொன்று 3 மாடி கட்டடமாகவும் இருந்தது.
இதேபோன்று சாரங்கபாணி கீழ சன்னதி தெருவில் துணிக்கடை அமைந்துள்ள வணிக வளாகத்தில் இரண்டாவது மாடி கட்டடமும், சோமேஸ்வரன் சன்னதியில் அமைந்துள்ள ஆயத்த கடை ஒன்றும் எவ்வித அனுமதியின்றி, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக புகார்கள் வந்தன.
இதனையடுத்து நகராட்சியின் நகரமைப்பு அலுவலர் மற்றும் உள்ளூர் திட்ட குழுமம் சார்பிலும் அந்த நான்கு நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டது.
உரிமையாளர்கள் உரிய விளக்கமும், ஆவணங்களையும் சமர்ப்பிக்காததால் மேற்கண்ட கட்டடங்களுக்கு வியாழக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
இந்தப் பணியில் நகராட்சியின் நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன், உள்ளூர் திட்ட குழுமத்தின் உறுப்பினர் செயலர் (பொறுப்பு) மூக்கையா ஆகியோர் ஈடுபட்டனர்.
