Asianet News TamilAsianet News Tamil

விநாயகர் சதுர்த்தி: சிலைகளை நீரில் கரைக்கும் வழிமுறைகள் வெளியீடு!

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

Vinayagar Chathurthi guidelines to immersion of idols smp
Author
First Published Sep 15, 2023, 5:13 PM IST

நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு, பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி வருகிற 18ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது.  நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது.  நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்கு வேண்டும்.” என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள்
1. களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப்பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. 

2. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.  மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம்.  

3. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.  நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/ பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

சூரியனை போன்ற நட்சத்திரம் பிறப்பு: அரிய புகைப்படத்தை எடுத்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!

4. சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம்/எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்குகந்த நீர் சார்ந்த / மக்கக் கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

 5. சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும்.

6. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

மேலும், விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியோரை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios