Villupuram collector flags National flag on Independence Day function

விழுப்புரம்

விழுப்புரத்தில் நாளை நடைபெற இருக்கும் சுதந்திர தின விழாவில் ஆட்சியர் சுப்பிரமணியன் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். மாவட்டத்தின் முக்கியமான இடங்களில் ஏராளமான காவலாளர்கள் தீவிரமாக சுற்றுப் பணியிலும், அணிவகுப்பிலும் ஈடுபட்டனர்.

சுதந்திர தின விழாவான நாளை (செவ்வாய்க்கிழமை) விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் கொண்டாடப்பட உள்ளது.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து சுதந்திர தினப் போராட்ட தியாகிகளை கௌரவித்து அவர்களைச் சிறப்பிக்கிறார். பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இந்த விழாவையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் காவல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில் காவலாளர்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்பு, காந்தி சிலை, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் பேருந்து மற்றும் இரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் முக்கியமான இடங்களில் ஏராளமான காவலாளர்கள் தீவிரமாக சுற்றுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் வழியாக கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட வெளி மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகளவில் கூடும் மார்க்கெட்டுகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைத்திற்கும் துப்பாக்கி ஏந்திய காவலாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழாவையொட்டி விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல் மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அணி வகுப்பை ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளார் வெள்ளைசாமி, ஆய்வாளர், விஜயரங்கன், உதவி ஆய்வாளர்கள் தீபா, பிரபாவதி ஆகியோர் நடத்தினர்.

இதேபோல் தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், இளம் செஞ்சிலுவை சங்கத்தினர், ஊர்காவல் படையினர், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் ஆகியோரும் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.