Asianet News TamilAsianet News Tamil

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் தர்ணா போராட்டம்…

villagers held-in-dharna-picketed-the-office-of-the-col
Author
First Published Nov 29, 2016, 11:08 AM IST


விழுப்புரம்,

புதிய பள்ளி கட்டிடம் கட்ட, கிராம மக்கள் பள்ளிக்கு அருகில் தானமாக கொடுத்த இடத்தை விட்டுவிட்டு, விவசாய உற்பத்தி செய்யும் இடத்தில் கட்டடடம் கட்ட முடிவெடுத்ததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அருகே சாணிமேட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் சாணிமேடு, ஆரியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் தரம் உயர்த்தப்பட்ட இந்த பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால் புதிய பள்ளி கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. இதற்காக ஆரியூர் கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுக்கு சொந்தமாக ஆரியூர் புளியந்தோப்பு அருகில் உள்ள 58½ சென்ட் நிலத்தை தானமாக கொடுத்து இந்த இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டக்கோரி மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு கொடுத்தனர்.

ஆனால் இந்த இடத்தை தேர்வு செய்யாமல் சாணிமேடு பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள இடத்தை புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்காக அரசு அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர்.

இந்த இடம், விவசாயம் செய்து உற்பத்தி பொருட்களை ஏற்றிக்கொண்டு வரும் பாதையாகும். மேலும் இங்கு புதிய பள்ளி கட்டிடம் அமையும்பட்சத்தில் ஆரியூர் கிராம மாணவ – மாணவிகள் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்துவரும் நிலைமை ஏற்படும்.

எனவே ஏற்கனவே தானமாக கொடுத்த ஆரியூர் புளியந்தோப்பு அருகிலேயே புதிய பள்ளி கட்டிடம் கட்ட வலியுறுத்தி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஆரியூர் கிராம மக்கள் 50–க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திடீரென இவர்கள் அனைவரும் ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாங்கள் ஏற்கனவே தானமாக கொடுத்த இடத்திலேயே புதிய பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாசில்தார் வெற்றிவேல், தாலுகா காவல் சப்–இன்ஸ்பெக்டர்கள் மருதப்பன், சத்தியசீலன் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததன்பேரில் அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios