வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. இந்த நியமனம், தமிழ்நாட்டில் கட்சியின் தேர்தல் வியூகத்தை தீவிரப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
வரவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தனது தேர்தல் பணிகளை வலுப்படுத்தும் வகையில் தேர்தல் பொறுப்பாளர் மற்றும் இணை பொறுப்பாளர்கள் நியமனத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஒப்புதலுடன், கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முக்கிய தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தல் வியூகம், அமைப்பு பணிகள் மற்றும் தேர்தல் ஒருங்கிணைப்பை முன்னெடுப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் கூட்டுறவு துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் ஆகியோர் தேர்தல் இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நடைபெறும் தேர்தல் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நியமனங்கள் உடனடி அமலுக்கு வரும் என்றும், தமிழ்நாட்டில் கட்சியின் தேர்தல் தயாரிப்புகளை வேகப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமன அறிவிப்பு தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகிகள், தலைவர் மற்றும் அமைப்பு செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசியல் களத்தில் பாஜக தனது தேர்தல் வியூகத்தை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளதற்கான முக்கிய அடையாளமாக இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.


