கரூர்

கரூரில், குழாயை சீரமைத்து எங்களுக்கு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெற்றுக் குடங்களுடன் வந்த கிராம மக்கள் மனு அளித்தனர். 

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கப்பட்டன. 

அதில், ஜெகதாபியை அடுத்த அல்லாளிக்கௌண்டனூரைச் சேர்ந்த கிராம மக்கள் குடிநீர் குழாயை சீரமைக்குமாறு ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

அந்த மனுவில், "எங்கள் பகுதியில் ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஜெகதாபி ஊராட்சி சார்பில் போடபட்ட இரு ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இருந்தும், குழாய் பழுதாகி ஆறு மாதங்களாகியும் அதை சீரமைக்க மறுக்கிறார்கள். எனவே, குழாயை சீரமைத்து எங்களுக்கு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர். 

அதேபோன்று, கிறிஸ்தவ மக்கள் இயக்கம் சார்பில் ஆட்சியரிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில்,  "கரூர் மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் 150-க்கும்  மேற்பட்ட தேவாலயங்களில் வழிபட்டு வருகிறார்கள். 

இந்த தேவாலாயங்களில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், போதகர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எனவே, மத போதகர்கள், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.