பெரம்பலூர்
 
கிராமத்தில் வரும் கலங்கிய குடிநீரை பாட்டிலில் கொண்டுவந்த கிராம இளைஞர்கள் குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி பெரம்பலூர் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் சாந்தா தலைமை வகித்தார். 

இதில் ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி உள்பட பல்வேறு அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதன்படி, குன்னம் தாலுகா சித்தளி அருகே உள்ள பீல்வாடி கிராமத்தில் வசிக்கும் ஆதி திராவிட மக்கள் கையில் கலங்கிய குடிநீரை பாட்டிலில் வைத்துக் கொண்டு  ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், "எங்கள் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

ஆனால், எங்கள் கிராமத்தில் ஒரு அடிபம்புதான் உள்ளது. குடிநீருக்காக கிணறுகள் ஏதும் இல்லை. தற்போது அந்த அடிபம்பில் வருகிற தண்ணீரும் கலங்கியபடிதான் வருகிறது. இந்த கலங்கலான தண்ணீரை குடிப்பதால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. 

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பீல்வாடி கிராமத்தில் புதிதாக கிணறு வெட்டி தண்ணீர் தொட்டி அமைத்து குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர். 

பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் பாட்டிலில் கொண்டுவந்த கலங்கிய குடிநீரை காண்பித்தனர். அதனைப் பார்த்துவிட்டு ஆட்சியர், உங்களது கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதுபோன்று பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட் டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) விஜயலட்சுமி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.