vijayabaskar announcement about neet
மருத்துவ படிப்பில் 85 சதவீத இடம் தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்ற தேசிய தகுதி நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 7 ஆம் தேதி நடைபெற்றது. 11 லட்சத்து 38 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் 85 ஆயிரம் பேர் தேர்வை எழுதினார்கள். இந்த தேர்வு தொடர்பாக வழக்கு தொடர்ந்ததையொட்டி தேர்வு முடிவை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது.
இந்த நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று வெளியிடபட்டது.
தேர்வெழுதிய 10,90,085 பேரில் 6,11,539 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் நீட் தேர்வெழுதிய 83,359 பேரில் 32,368 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.
சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், நீட் தேர்வால் எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ படிப்பில் 85 சதவீத இடம் தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் தர அரசாணை வெளியிடப்பட்டது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
