தவெக தலைவர் விஜய் சொன்னது போலவே நெல் கொள்முதல் மையங்களில் மூட்டைக்கு 60 ரூபாய் லஞ்சம் வாங்குவதாக விவசாயிகள் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.
தவெக தலைவர் விஜய் சனிக்கிழமைதோறும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கருணாநிதி கோட்டையான திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விஜய், முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த மாவட்டத்தை கருவாடாக மாற்றி விட்டதாக குற்றம்சாட்டி இருந்தார். மேலும் நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
விவசாயிகளிடம் லஞ்சம்
''இந்த மாவட்டத்துல உள்ள கொள்முதல் மையங்கள்ல ஒரு மூட்டை நெல்லை ஏற்றி இறக்குறதுக்கு 40 கிலோ மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் வாங்குறாங்களாம். அரசாங்கமே ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் கொடுக்குறாங்க. ஒரு டன்னுக்கு 1000 ரூபாய் கமிஷன். இந்த 4 ஆண்டுகள்ல பல கோடிகளை விவசாயிகள் கிட்ட இருந்து கமிஷனா புடுங்கியிருக்காங்க. இதை வேற யாரும் சொல்லியிருந்தா கூட நம்பியிருக்க மாட்டேன். ஆனா என்கிட்ட சொன்னதே விவசாயிங்கதான்.
முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி
விவசாயிங்க பொய் சொல்ல மாட்டாங்க. முதல்வர் சார். இது உங்க ஆட்சியில நடந்திருக்கு. உங்களுக்கு வேணும்னா 40க்கு 40னா அது எலக்ஷன் ரிசல்ட்டா இருக்கலாம். ஆனால், டெல்டா விவசாயிகளுக்கு 40க்கு 40னா அவங்க வயித்துல அடிச்சு நீங்க வாங்குன கமிஷன். இது உங்க ஆட்சியில நடந்திருக்கு சி.எம்.சார் இதுக்கு என்ன சொல்ல போறீங்க.?'' என்று விஜய் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார்.
விஜய் சொன்னது கரெக்ட் தான்
இந்நிலையில், விஜய் சொன்னது சரி தான். கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மூட்டைக்கு 60 ரூபாய் லஞ்சம்
இது தொடர்பாக பேசிய விவசாயிகள், ''தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 60 ரூபாய் லஞ்சம் வாங்குகிறார்கள். நாங்கள் நகையை அடகு வைத்து, 3 மாதம் கஷ்டப்பட்டு, மழையில் இருந்து காப்பாற்றி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்தால் பில் போடும்போது ஒரு மூட்டைக்கு 60 ரூபாய் பிடித்துக் கொள்கிறார்கள்'' என்றனர்.
லஞ்சப் பிச்சை பெறும் அதிகாரிகள்
தொடர்ந்து பேசிய விவசாயிகள், ''இந்த தொகை அரசு அதிகாரிகளுக்கும் செல்கிறது என்று கூறுகின்றனர். ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒவ்வொரு பருவத்திலும் விவசாயிகளிடம் கட்டாயமாக லஞ்சப் பிச்சை பெறுகின்றனர். இது தொடர்பாக நாங்கள் பல ஆண்டுகளாக சொல்லியும் மத்திய அரசும், மாநில அரசும் செவிசாய்க்கவில்லை.
உயர்நீதிமன்றமே கண்டித்தும் திருந்தவில்லை
அரசியல் கட்சிகள் இதுபற்றி பேச தயங்குகிறார்கள். விவசாயிகள் குரலையும் அரசு கேட்பதில்லை. மூட்டைக்கு 40 ரூபாய் ஏன் வாங்குகிறீர்கள்? என சென்னை உயர்நீதிமன்றமே கண்டித்தும், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் லஞ்ச தொகை அதிகமாகி இருக்கிறதே தவிர குறையவில்லை. ஏற்கெனவே லாபம் இல்லாத நாங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். ஆகவே மத்திய, மாநில அரசுகள் இனிமேலாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என வேதனையுடன் தெரிவித்தனர்.
