நாகர்கோவில் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விடிய விடிய நடத்திய சோதனையில் அவர் வருமானத்திற்கு அதிகமாக 171% சொத்து சேர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றுபவர் கண்மணி. இவரது கணவர் சேவியர் பாண்டியன் அரசு வழக்கறிஞராக உள்ளார். நாகர்கோவிலில் கோட்டாறு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த கண்மணி, பின்னர் எஸ்.பி.சி.ஐ.டி எஸ்.ஐ ஆக பணிபுரிந்தார். 2018-2021 வரை எஸ்.பி இன்ஸ்பெக்டராக பணியில் இருந்தார். அதன் பிறகு நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். மேலும் இவருக்கு மத்திய அரசின் சிறந்த காவல் ஆய்வாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தான், நாகர்கோவிலில் உள்ள இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிகாலை தொடங்கி இன்று அதிகாலை வரை அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் 20 மணி நேரம் கடந்து விடிய விடிய சோதனையானது நடந்தது.
அதோடுமட்டுமல்லாமல் காவல் ஆய்வாளர் கண்மணியின் உறவினர் மணி, அவரது தோழி அமுதா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி பீட்டர் பால் தலைமையில் அதிரடி சோதனை தொடர்ந்து நடந்தது. 

இந்த சோதனையின்போது 88 சவரன் தங்க நகைகள், 7 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வங்கி வைப்புத் தொகை 88 லட்சம் ரூபாய், வங்கி முதலீடு 3 லட்ச ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 13 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், வெற்று பாண்டில் கையெழுத்துபோட்ட பாண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆய்வாளர் கண்மணி தனது வருமானத்திற்கு அதிகமாக 171.78 % சொத்து சேர்த்தது இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டது காவல்துறை அதிகாரிகள் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.பி இன்ஸ்பெக்டராக இருந்த சமயத்தில் அரசியல்வாதிகளுக்கும், மணல் கடத்தல் கும்பலுக்கும் ஆதரவாக இவர் பல போலீஸ் அதிகாரிகளை பழிவாங்கியதாக போலீஸ் வட்டாரத்தில் கூறுகின்றனர். வழக்கமாக வருமானத்துக்கு அதிகமாக 15 சதவிகிதம் சொத்து இருந்தால் பெரிய பிரச்னை இல்லை. ஆனால், இவர் 171 சதவிகிதம் அதிகமாக சொத்து சேர்த்திருப்பதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.