லஞ்ச ஒழிப்புத்துறை மெகா ரெய்டு.. கட்டுக்கட்டாக கரன்சி பறிமுதல்.. தலையை சுற்ற வைக்கும் வசூல் வேட்டை..
தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் மட்டும் கணக்கில் வராத ரூ.75 லட்சம் ரொக்கம் சிக்கியுள்ளது. இந்த சோதனையில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் மொத்தமாக சுமார் 1.13 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 46 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்றிரவு அதிரடி சோதனை நடத்தினர். திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் விடிய விடிய நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுக்குறித்து கோட்டப் பொறியாளர் இளம்வழுதியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுப்போல நாமக்கல்லில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட மற்றும் உதவி கோட்ட அலுவலகங்களில் நடத்திய சோதனையில் ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்ட பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனரிடமிருந்து கணக்கில் காட்டப்படாத 6 லட்சத்து 68ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க:கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை!!
விழுப்புரம் மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் 4 லட்சத்து 26 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.நெல்லை மாவட்ட தொழில் மையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டில், கணக்கில் வராத ரூ.3.55 லட்சம் சிக்கியது.
நாகை ஊரக வளர்ச்சி முகமை அலுவலக உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டதில், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் சிக்கியது. ஈரோடு மாவட்டம் கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும், தர்மபுரி நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் ரூ.15 ஆயிரமும், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் ரூ.2.25 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.14 ஆயிரமும், திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் ரூ.12 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மொத்த நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட மெகா ரெய்டில் சுமார் ரூ.1.13 கோடி ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் படிக்க:தீபாவளி வசூல் எதிரொலி.. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை !!