கோவையில் துணை மேயராக தேர்வுசெய்யப்பட்ட வெற்றிச்செல்வன் பதவியேற்றப்பின் தனது நாற்காலியில் தனது தாயை அமரவைத்து அழகுபார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோவையில் துணை மேயராக தேர்வுசெய்யப்பட்ட வெற்றிச்செல்வன் பதவியேற்றப்பின் தனது நாற்காலியில் தனது தாயை அமரவைத்து அழகுபார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்றது. சில இடங்களில் சுயேட்சையாக போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றனர். இதை அடுத்து வெற்றி பெற்றவர்கள் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர். இந்த நிலையில் இன்று மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. வார்டு உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் மேயர், துணை மேயர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அந்த வகையில் கோவையில் இன்று மேயருக்கான மறைமுக தேர்தல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திமுக மாமன்ற உறுப்பினர்கள் 96 பேர் மற்றும் ஒரு எஸ்.டி பி.ஐ மாமன்ற உறுப்பினர் என மொத்தம் 97 பேர் சேர்ந்து ஒரு மனதாக கல்பனா ஆனந்தகுமாரை மேயராக தேர்வு செய்தனர். பின்னர் துணை மேயருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், திமுகவின் வெற்றிச்செல்வன் துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். அதை தொடர்ந்து அவரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் துணை மேயராக தேர்வு செய்தனர்.

இதை அடுத்து வெற்றிச் செல்வன் இன்று மாநகராட்சி துணை மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்படி, கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமாரும், துணை மேயராக வெற்றிச் செல்வனும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்றத்திற்கு பின் துணை மேயர் நாற்காலியில் வெற்றிச்செல்வன், தனது தாயை முதலில் அமர வைத்து அழகு பார்த்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. துணை மேயருக்கான நாற்காலியில் தனது தாயை அமரவைத்து அழகு பார்த்த வெற்றிச்செல்வனின் செயல் அங்கிருந்தோரை நெகிழ்ச்சியடைய செய்தது.
