பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழர்களின் நெஞ்சில் நஞ்சை விளைவிப்பதாகவும், கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதாகவும் கூறி அதனை தடை செய்யவும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அனைவராலும் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் ரசித்துப் பார்த்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலோடு ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கினறனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு துரோகம் செய்தேன் என்று ஜூலியும்... ஓவியா மீண்டும் பிக்பாசில் வருவார் என்று பிந்துமாதவியும்... தவறே செய்யாத ஓவியா, வெளியேற நானும் காரணம் என அழும் சினேகன்... இதைப் பார்த்து கமலும் கண் கலங்குவதும்... இப்படி அனைவரையும் எதிர்பார்க்கும் வகையில் பிக்பாஸ் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவுகள் இருந்தாலும் எதிர்ப்புகளும் இருந்து வருகின்றன. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், கருத்து கூறும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சி கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கிறது என்று கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும், அப்படி தவறும் பட்சத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழ் சமூகத்தின் பெண்களைக் கொண்டு, தொலைக்காட்சிக்கு எதிராகவும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவோம் என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.