கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாத அவலம்... குவைத்தில் தனியாக தவிக்கும் மனைவி- வேல்முருகன் வேதனை
மாரடைப்பால் இறந்த தனது கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல் தவித்து கொண்டிருப்பதாகவும், தன்னை குவைத்தில் இருந்து அழைத்து வர வேண்டும் என மகாலட்சுமி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கணவர் மரணம்- குவைத்தில மனைவி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம் திப்பிராஜபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் 22.10.2023 அன்று மாரடைப்பால் காலமானார். இவரது மனைவியான மகாலட்சுமி, குவைத் நாட்டில் பணியாற்றி வருகிறார். இதனால் அதிர்ச்சியையும், வேதனையையும் அடைந்த மகாலட்சுமி, தனது கணவர் ரவிச்சந்திரன் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக முயன்று வருகிறார். இந்தநிலையில் குவைத்தில் பணியாற்றி வரும் நிறுவனம் மகாலட்சுமியை அனுப்ப மறுப்பதாக தெரிகிறது.
இறுதி சடங்கில் கலந்து கொள்ளனும்
இதுகுறித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர், மாண்புமிகு வெளிவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கு, மறைந்த ரவிச்சந்திரன் மற்றும் மகாலட்சுமியின் மகள் ரம்யா நீலமேகம் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் குவைத்தில் இருந்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள மகாலட்சுமி, அதில், தனது கணவர் ரவிச்சந்திரனின் இறுதி சடங்கில் பங்கேற்க வேண்டும் என்றும் அவரது முகத்தை கடைசியாக பார்க்க வேண்டும் என்றும் தான் தமிழ்நாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மகாலட்சுமியை மீட்க வேண்டும்
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேலுமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது கணவரின் முகத்தை இறுதியாக பார்க்க முடியாதோ என்ற தவிப்பும், அச்சமும், மகாலட்சுமியிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, கணவர் இறந்த துக்கம் தாங்காமல் குவைத்தில் தவித்து வரும் மகாலட்சுமியை, தமிழ்நாட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துவதாக அந்த செய்தியில் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்