Asianet News TamilAsianet News Tamil

வீரலட்சுமியின் 'திடீர்' சபதம்..!

veeralakshmi sudden challanges
veeralakshmi sudden challanges
Author
First Published May 11, 2018, 6:51 PM IST


வீரலட்சுமியின் 'திடீர்' சபதம்

ஆளும்கட்சிக்கு ஆதரவு நிலைப்பாட்டில் அரசியல் செய்து வருகிறார் தமிழர் முன்னேற்றப்படையின் வீரலட்சுமி. ' குழந்தையைக் கடத்த வந்தவர்கள் எனக் கூறி மூதாட்டியைக் கொல்வதும் குழந்தைகளை பாலியல் கொடுமைக்கும் ஆளாக்கப்படுவதற்கு திரைத்துறையே காரணம்' எனக் கொதிக்கிறார். 

தமிழர் பிரச்னைகளுக்காக அடிக்கடி போராட்டங்களை நடத்தி வந்த வீரலட்சுமி, சமீபகாலமாக மௌனம் காக்கிறார். ஐ.பி.எல் போட்டி நடந்த சேப்பாக்கத்தில், காவல்துறை மீது நடந்த தாக்குதலையும் கண்டித்திருந்தார். சீமான், வேல்முருகன் ஆகியோரது அரசியலையும் அவர் விமர்சித்தார். ' தமிழரான எடப்பாடி பழனிசாமி, தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்' எனவும் பேசி வந்தார். இந்நிலையில், இன்று அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், விழுப்புரத்தில் மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவத்தை சுட்டிக் காட்டி கொதித்திருந்தார். அவரது அறிக்கையில், ' தமிழ் மண் தன்னுடைய வரலாற்றில் இதுபோன்ற அருவருப்பான அசிங்கமான சம்பவங்களை சந்தித்ததில்லை. குழந்தைகள் மீது பாலியல் வன்புணர்ச்சி தாக்குதல், பணத்துக்காக கடத்துதல் ஆகியவற்றைச் செய்வது யார்? இதற்கு யார் பொறுப்பேற்பது? 

வயது முதிர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி உடைமைகளை அபகரித்தல், பாலியல் வன்புணர்ச்சி நிகழ்த்துதல் போன்ற சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் யார்? இதற்கு யார் பொறுப்பேற்பது? கண்ணெதிரே தோன்றும் பெண்கள் தன்னுடைய தாய் உறவா.. தங்கை உறவா.. என்று யோசிக்காமல் அவர்களை தாக்கி உடைமைகளை பரித்து பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது யார்? பதில் சொல்ல வேண்டியவர்களும் பொறுப்பேற்பவர்களும் இவர்கள்தான். கலைத்துறையாக இருந்த சின்னத்திரை துறையினரும் பெரிய திரைத்துறையினரும் பணத்துக்காகக் கவர்ச்சி துறையாக மாற்றியதே காரணம். இலவசமாக கல்வி போதிக்க வேண்டிய அரசு, மதுபான கடைகளைதானே ஏற்று நடத்துவதற்கு பொறுப்பேற்க வேண்டும். பணத்திற்காக வாக்கை விற்கும் வாக்காள பெருமக்களும் இப்பாதக செயலை அனுபவிக்க வேண்டும். 50 ஆண்டுகள் கோடம்பாக்கம் கூத்தாடிகளிடமிருந்து புனிதமான தமிழக அரசியலையும் ஆட்சி அதிகாரத்தையும் மீட்பதே நமது இலக்கு' எனக் கொதிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios