ஸ்டெர்லைட் ஆலையை இயக்க மீண்டும் நடவடிக்கை எடுத்து வருவதாக, வேதாந்த குழுமம் கூறியிருப்பது, தூத்துக்குடி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுக்காற்றால், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக போர்க்கொடி தூக்கிய பொதுமக்கள், 99 நாட்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100வது நாளன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

 
 
பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாலும், எச்சரிக்கையை மீறி வன்முறையில் ஈடுபட்டதாலும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினரும், அரசும் விளக்கம் அளித்தாலும், பல்வேறு அரசியல்  கட்சித் தலைவர்களின் கடும் கண்டனத்தால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது. 
 
தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், போராட்டக்களத்தில் நின்ற மக்கள் நிம்மதி அடைந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடல் தற்காலிகமானதுதான் என்று வேதாந்தா குழுமம் தொடர்ந்து சொல்லி வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின்போது, வெளியூருக்குச் சென்ற ஊழியர்கள், கட்டாயமாக ஆலையில் ஆஜராகி, கையெழுத்திட வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்ட, ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரான வேதாந்தா குழுமம், பொதுமக்களிடையே அச்சத்தைப் போக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவும் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
மேலும், ஸ்டெர்லைட் ஆலையின் பணிபுரியும் ஊழியர்கள் மூலமே, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஆதரவை பெருக்கி, அதையே வைத்து, ஆலையை மீண்டும் இயக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, அதனுடன் தொடர்புடைய ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக வேதாந்தா குழுமம் தெரிவித்துள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரத்தை உருக்கும் பணி, கடந்த மார்ச் மாதமே நிறுத்தப்பட்டு விட்டதாகவும், அதன்பிறகு பராமரிப்பு பணிகள் நடந்து வந்தபோதுதான், தமிழக அரசு ஆலையை இயக்க அனுமதி மறுத்ததுடன், சீலும் வைத்ததாக வேதாந்தா குழுமம் தெரிவித்துள்ளது. இந்திய எஃகு சந்தையில் தாங்கள் சிறப்பான இடத்தில் இருப்பதாகவும், ஜார்க்கண்டில் இரும்பு தாதுகளை எடுக்கும் முக்கியப் பணிகளை செய்து வருவதாகவும் கூறியுள்ள வேதாந்தா குழுமம், தேவையான அனுமதிகள் விரைவில் பெறப்பட்டு, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கும் என்று தெரிவித்துள்ளது.