தமிழக முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் அரசியலமைப்பு சட்டத்திற்கும், அறிவியல் மனப்பான்மைக்கும் எதிரானது.

தமிழக முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தவெக வெற்றியை முன்கூட்டியே கணித்தவர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தரும் தோழமை கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில் வன்னி அரசு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான அறிவியலுக்கு புறம்பான இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளரும், திண்டிவனம் தொகுதி எம்எல்ஏவுமான வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:

ஆஸ்தான ஜோதிடர்கள்’ என்பவர்கள் மன்னர்களின் அரசவையில் ஆலோசனை கூறும் ராஜகுருக்களாக வலம்வந்தவர்கள். ஆனால் இன்று மன்னர்களும் இல்லை, மன்னராட்சியும் இல்லை, அவர்களை ஆட்டிப்படைத்த வேதகுப்பைகளும் இல்லை. சனநாயக இந்தியாவின் தந்தையான புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தின் துணையோடு மக்களாட்சி நடைபெறுகிறது.

இன்றைய காலகட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தலைமையேற்று நடத்தும் முதலமைச்சருக்கு ஆலோசனை கூறும் அரசுப்பதவியில், ‘ஹார்ட் அட்டாக் வந்தால் பதற்றப்படாதீர்கள், மந்திரம் சொல்லுங்கள்’ ’தலைவிதி இருந்தால் தான் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும்’ என்று அறிவுரை சொல்லும் நபரை நியமிப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அறிவியலார்ந்த உளப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல்’ ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 51A (h) வரையறுக்கிறது. அரசியலமைப்பு சட்டம் பரிந்துரைக்கும் கடமையை குடிமக்கள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டியது தான் அரசின் தலையாய பணி. ’அறிவியல் மனப்பான்மையை’ (Scientific Temper) வளர்த்தெடுக்க வேண்டிய அரசு, முதல்வருக்கே ஆலோசனை சொல்லும் அரசுப் பதவியை அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு கருத்துகளை பரப்புவதையே ’தொழிலாக’ கொண்டிருப்பவருக்கு வழங்கினால், அது மக்களுக்கு சொல்லும் செய்தி என்னவாக இருக்கும்?

மக்களை இருளில் தள்ளும் பிற்போக்கு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை விரிவாக ஆராய்ந்து தமிழ்நாட்டிலும் அத்தகைய சட்டத்தை கொண்டு வருவது தான் மதச்சார்பற்ற அரசின் பணியாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான அறிவியலுக்கு புறம்பான இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.