சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது ஸ்கூட்டர் மீது திருமாவளவன் கார் மோதியதை தட்டிக் கேட்ட வழக்கறிஞரை விசிகவினர் சரமாரியாக தாக்கினார்கள். இதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தமிழகத்தில் அசைக்க முடியாத அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். இந்நிலையில், திருமாவளவன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் அருகே தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

ஸ்கூட்டர் மீது மோதிய திருமாவளவன் கார்

அப்போது திருமாவளவன் சென்ற கார், முன்னாள் சென்ற ஒரு ஸ்கூட்டர் மீது மோதியதாக கூறப்படுகிறது. அந்த ஸ்கூட்டரை ஓட்டி வந்த வழக்கறிஞர், அதை சாலையில் நிறுத்தி விட்டு ''ஏன் எனது ஸ்கூட்டர் மீது மோதினீர்கள்'' என்று கேட்டுள்ளார். அப்போது திருமாவளவன் காரில் இருந்தவர்கள் அந்த வழக்கறிஞரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வழக்கறிஞரை தாக்கிய விசிகவினர்

மேலும் வழக்கறிஞரை சரமாரியாக தாக்கிய அவர்கள் அவரின் ஸ்கூட்டரையும் ஆவேசமாக தள்ளி சேதப்படுத்தினர். வழக்கறிஞரை தாக்கிய விசிகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்கள்.

ஆனாலும் விசிகவினர் அந்த வழக்கறிஞரை விடாமல் துரத்தி தாக்கியதால் அவர் உடனடியாக நீதிமன்ற வளாகத்துக்குள் சென்றார். தொடர்ந்து திருமாவளவனுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி விசிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், காவல்துறையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

விசிகவினர் மீது நடவடிக்கை வேண்டும்

நடுரோட்டில் வழக்கறிஞரை விசிகவினர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. வழக்கறிஞரை தாக்கிய விசிகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.விசிகவினரின் செயலுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை கண்டனம்

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அண்ணாமலை, ''பட்டப்பகலில் அதிர்ச்சியூட்டும் வகையில் வி.சி.க (VCK) ரவுடிகள் ஒரு வழக்கறிஞரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வழக்கறிஞர், தான் மீது மோதிய கார் ஓட்டுநரிடம் கேள்வி கேட்டதற்காகத் தாக்கப்பட்டார். இந்த கார், வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்களை ஏற்றிச் சென்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் திருமாவளவன் இந்தியத் தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்து ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் அவரது கட்சியினர் வழக்கறிஞரை தாக்கியுள்ளனர்'' என்றார்.