Asianet News TamilAsianet News Tamil

ஆளுநரை திரும்பப் பெற திமுக போராட்டம்: திருமாவளவன் வலியுறுத்தல்!

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக தலைமையில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்

VCK Leader Thirumavalavan urges dmk to announce protest to withdraw governor rn ravi
Author
First Published Jun 30, 2023, 11:17 AM IST

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாலும், அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாலும் அவர் கவனித்து வந்த இலாக்காக்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமியிடம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த 16ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையேயான மோதல், ஒருபடி மேலே சென்றுள்ள நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்றிரவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “அமைச்சர் செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில், கடுமையான கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, தன் மீதான விசாரணைக்கும் அவர் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அமலாக்கத் துறை விசாரணையில் உள்ளார். அதுமட்டுமில்லாமல், தமிழக காவல் துறையிலும் அவர் மீது சில வழக்குகள் உள்ளன. இதனால் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். எனவே, உடனடியாக அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியுள்ளார்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.

2024 தேர்தல் வியூகத்தை இறுதி செய்யும் பாஜக: தமிழ்நாட்டை கவர் செய்ய மெகா திட்டம்!

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. சட்ட ரீதியாக இதனை நாங்கள் சந்திப்போம் என்றார். அதன் தொடர்ச்சியாக, அதாவது அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அந்த நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி எழுதிய கடிதத்தில், “அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெறுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, அட்டர்னி ஜெனரலை நான் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவர் தனது கருத்தை தெரிவிக்கும் வரை, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக தலைமையில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், “ஆளுநரின் போக்கு ஜனநாயகத்துக்கு முரணானது, அரசியல் அமைப்புக்கு எதிரானது. திமுக அரசுக்கு எதிராக நெருக்கடிகளை உருவாக்க வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டது. இதனை விசிக கடுமையாக கண்டிக்கிறது. அவர் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார் அல்லது தனது நடவடிக்கையை நிறுத்திக் கொண்டார் என்றாலும் கூட, மறுமறுபடி வேறு வடிவங்களில் திமுக அரசுக்கு நெருக்கடியை கொடுத்துக் கொண்டே இருப்பார்.

எனவே, தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். மணிப்பூர் விவகாரம், ஆர்.என்.ரவி விவகாரம் தொடர்பாகவும் தீவிரமாக கலந்து ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆளுநரை திருமப்பெற வலியுறித்தி திமுக தலைமையில் பெரும் போராட்டத்தை நடத்த வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios