நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வியூகத்தை பாஜக இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பாஜக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில் உள்ளது. அதன் தொடர்ச்சியாக, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் வெற்ற பெற அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. 2024 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராவார் என அமித் ஷா சூளுரைத்துள்ளார்.
அதேசமயம், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. வலுவான பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்திய பாட்னா கூட்டத்தில் பாஜகவை வீழ்த்த ஒத்துழைப்புடன் செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வியூகத்தை பாஜக இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுத்தேர்தலை எதிர்கொள்வது, மக்களை எப்படி அணுகுவது, வாக்குறுதிகள் உள்ளிட்டவை குறித்தான் தெளிவான இறுதி வரைபடத்தை அக்கட்சி தயாரித்துள்ளதாக தெரிகிறது.
அதன்படி, ஒரு விரிவான மைக்ரோ மேலாண்மை அடிப்படையிலான உத்தியை பாஜக இறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக, பாஜக உயர்மட்ட தலைவர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தலைவர்களுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அடுத்தடுத்த ஆலோசனை கூட்டங்களை விரைவாக நடத்தவுள்ளதாகவும் டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அமைச்சரவையில் மாற்றம்... ஜூலை 3ஆம் தேதி பிரதமர் மோடி அமைச்சர்களுடன் ஆலோசனை
“பாஜகவின் முக்கிய அரசியல் ராஜதந்திரியான அமித் ஷா, தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பிற முக்கிய உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் சிந்தனைக் குழு, 543 மக்களவைத் தொகுதிகளையும் உள்ளடக்கும் வகையில் நாட்டை தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு என மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளது. தெற்கு பிராந்தியத்தின் கீழ், அனைத்து 129 மக்களவைத் தொகுதிகளும், தெலுங்கானா (17), கேரளா (20), தமிழ்நாடு (39), கர்நாடகா (28) மற்றும் ஆந்திரப் பிரதேசம் (25 மக்களவைத் தொகுதிகள்) ஆகியவை மைக்ரோ மேலாண்மை அடிப்படையில் பூத்துகள் மூலம் உள்ளடக்கப்படும். தெற்கு பிராந்தியத்தில் குறைந்தபட்சம் 80-95 இடங்களை வெல்ல வேண்டும் என்பது இலக்கு.” என இதுகுறித்து விவரம் அறிந்த பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேபோல், கிழக்கு இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்தில் 42 இடங்களும், அசாமில் 14 இடங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மாநிலப் பிரிவுகள், கட்சியின் மாநிலத் தலைவர்கள், மூத்த நிர்வாகிகளுடன் ஜேபி நட்டா விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது தேர்தல் வியூகம் குறித்து பயனுள்ள வகையில் அவர்களுடன் விரிவான அலோசனையை அவர் மேற்கொள்வார் எனவும் கூறுகின்றனர்.
கர்நாடகாவில் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பாஜக தனது சமூக மற்றும் மதம் சார்ந்த காரணிகளை மையப் புள்ளியாக வைத்து தென்னிந்திய மாநிலங்களுக்கான புதிய வியூகங்களை வகுத்துள்ளதாக தெரிகிறது.
