பெங்களூரு நம்ம மெட்ரோவை ஓசூருடன் இணைக்கும் திட்டம் தொழில்நுட்ப மற்றும் அரசியல் காரணங்களால் முடங்கும் அபாயத்தில் உள்ளது. ஓசூரின் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு திட்டத்தைக் கைவிடக்கூடும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். 

Bommasandra to Hosur metro project : கர்நாடக மாநிலத்தின் நம்ம மெட்ரோவில் பொம்மசந்திராவிலிருந்து 23 கி.மீ. தூரம் நீட்டித்து, தமிழ்நாட்டின் ஓசூரை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து ஆய்வுக்கு பிற்கு BMRCL மாநில அரசுக்கு அறிக்கை தாக்கதல் செய்துள்ளது. அதில், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) 25 KV AC ஓவர்ஹெட் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. ஆனால், நம்ம மெட்ரோ நெட்வொர்க் 750V DC மின்சாரத்தைப் பயன்படுத்தும். இவ்வாறு இரு மாநில மெட்ரோ அமைப்புகளும் வெவ்வேறு மின்சார தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால், இரண்டையும் ஒருங்கிணைக்க முடியாது என தெரிவித்திருந்தது.

ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம்

இந்த நிலையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநில தலைவர் பெங்களூரு மாநகரில் இருந்து தமிழ்நாடு எல்லையான பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் சேவையை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. இதனால், பெங்களூரு ஒசூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. பொம்மசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து தமிழ்நாட்டின் ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்த தமிழ்நாடு அரசுடன் கர்நாடக மாநில அரசு பேசி வருவதாக செய்திகள் வெளியாகின.

பெங்களூரு மாநகரும், தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான ஓசூரும் மெட்ரோ ரயிலால் இணைக்கப்பட்டால் பெரும் வளர்ச்சிக்கு வித்திடும். மக்களின் போக்குவரத்தும் எளிதாகும். அதனால், இரு மாநில மக்களும் எப்போது பொம்மசந்திரா ஒசூர் மெட்ரோ ரயில் சேவை வரும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

ஆனால், ஓசூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டக்கப்பட்டால், ஓசூருக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். ஒசூரில் தொழில் தொடங்க அதிகமான நிறுவனங்கள் முன்வரும் எனக்கூறப்படுவதால், இத்திட்டத்தை கைவிட கர்நாடக காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

நட்பும், கூட்டணியும் தமிழகத்திற்கு பயன் தரவேண்டும்

உள்கட்டமைப்பு திட்டங்கள் அனைவருக்கும் நன்மை தரக்கூடியவை. மெட்ரோ ரயில் என்பது வளர்ச்சிக்கு மிகமிக அவசியமானவை. எனவே, திட்டமிட்டபடி பொம்மசந்திரா ஒசூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடர வேண்டும். இதனால் இரு மாநிலங்களுக்கும் பெரும் நன்மை ஏற்படும். இந்த விஷயத்தில் திமுக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மவுனமாக இருப்பது கண்டிக்கத்தக்கது. 

கர்நாடகத்தில் இருப்பது திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சி. கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நெருங்கிய நண்பர்கள் கூட்டணியும், நட்பும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும். எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக, கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவும் பேசி பொம்மசந்திரா ஒசூர் மெட்ரோ ரயில் திட்டத்தை திட்டமிட்டவாறு முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.