400 இடம் உறுதி.. இந்தி தெரியாது போடா என்று சொன்ன இந்தியா கூட்டணி.. இப்போ சொல்லுங்க.. வானதி சீனிவாசன் அதிரடி

“இலவசத் திட்டங்களால் நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்கள் முடங்குவதையே பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார் என்றும் , வடக்கு வாழ்கிறது - தெற்கு தேய்கிறது', 'ஆரியம் - திராவிடம்', 'இந்தி தெரியாது போடா' என பிரிவினை சித்தாந்தத்தை விதைப்பதை திமுக தான்” என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

vanathi srinivasan about Indian alliance at hindi imposition issue-rag

கோவை தெற்கு எம்.எல்.ஏவும், பாஜகவை சேர்ந்தவருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்து மதம் - இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய மக்களவைத்   தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. அதையொட்டி ஊடகங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடி வருகிறார். அப்போது, கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனைகள், தேர்தலில் வெற்றி பெற 'இண்டி' கூட்டணி செய்யும் சதித் திட்டங்களை  அம்பலப்படுத்தி வருகிறார். 

தேர்தல் வெற்றிக்காக  குடும்ப, ஊழல் கட்சிகள் ஆளும் சில மாநிலங்களில் இலவசத் திட்டங்களை அறிவிப்பது பற்றி தனது கருத்துகளை பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார்.  அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச சலுகை அளிப்பதால், மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்கள் முடங்குவது பற்றியும், அரசு பேருந்து கழகங்களின் கட்டமைப்புகள் சிதைந்து வருவது பற்றியும் பிரதமர் மோடி தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார்.  

பிரதமர் மோடி எதை பேசினாலும் அதை திரித்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி தலைவர்களின் வழக்கம். அந்த வழக்கத்தின்படி, "இலவசத் திட்டங்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசுகிறார்" என 'இண்டி' கூட்டணி கட்சியினர் திரித்து வருகின்றனர்.

இலவசத் திட்டங்களுக்கு பாஜக எதிரி அல்ல. ஆனால், முழுக்க முழுக்க தேர்தல் வெற்றிக்காக, தங்களது குடும்ப ஆட்சியை தக்க வைப்பதற்காக இலவசத் திட்டங்களை அறிவிப்பது நாட்டின் வளர்ச்சியை முடக்கி விடும். பட்டியலின, பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை இலவச திட்டங்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் செலவழிக்கின்றன. இதனால், பட்டியலின, பழங்குடியின் மக்களின் முன்னேற்றம் தடைபடுகிறது.

இது போன்ற சிக்கல்களைத்தான் பிரதமர் நரேந்திர மோடி சுட்டி காட்டினார். கொரோனா பேரிடர் காலத்தில், 'பிரதமரின் அனைவருக்கும் வங்கி கணக்குத் திட்டத்'தில் வங்கி கணக்கு தொடங்கிய ஏழைகளுக்கு, மூன்று மாதங்களுக்கு தலா ரூ. 500 வரவு வைக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக  விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு இலவச திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

பிரதமர் மோடி ஆட்சியில் தான் இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்டத்தின் வாயிலாக 'அனைத்து குடும்பங்களுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு' என்ற சாதனை படைக்கப்பட்டது. எனவே, பிரதமர் மோடியும், பாஜகவும் இலவச திட்டங்களுக்கு எதிரானது என்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பொய் பிரசாரத்தை மக்கள் நம்பப் போவதில்லை. பிரதமர் மோடிக்கு எதிராக மக்களை திருப்பிவிடலாம் என்ற அவரது கனவும் பலிக்கப் போவதில்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18-5-2024) வெளியிட்ட அறிக்கையில், 
"உத்தரப்பிரதேச மக்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாக தன்னுடைய கற்பனைக் கதைகளைபிரதமர் மோடி கட்டவிழ்க்கத் தொடங்கியுள்ளார். பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது" என்று வழக்கம்போல பிரதமர் மோடி பேசியதை திரித்திருக்கிறார். தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சித் தலைவர்களும், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியினரும் உத்தரபிரதேசம், பீகார் மாநில மக்களை இழிவுபடுத்தாத நாளே இல்லை என்று சொல்லலாம். 

திமுகவினர் தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் 'வடக்கன்', 'பானிபூரி', 'பான்பராக்' உள்ளிட்ட பல்வேறு அவமதிக்கும் சொற்களால் வட மாநில மக்களை அழைத்து வருகின்றனர். வட மாநில மக்களை குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார் மாநில மக்களை இழிவுபடுத்த திமுகவினர் பயன்படுத்தும் சொற்களை இங்கே நான் குறிப்பிட  விரும்பவில்லை. அவ்வளவு மோசமான சொற்கள் அவை.

திமுகவின் மூத்த அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் உத்தரப்பிரதேசம் பீகார் போன்ற வட மாநில மக்களைப் பற்றி பேசியதெல்லாம் ஊடகங்களில், சமூக ஊடகங்களில் ஆவணமாகியுள்ளன. இணைய வெளிகளில், 'திமுக, வடமாநில மக்கள்' என்று குறிப்பிட்டு தேடினாலே திமுகவினர் வடமாநில மக்கள் பற்றி பேசியது அனைத்தும் வந்துவிடும். 'கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை' என்ற பழமொழிக்கு ஏற்பதான், வட மாநில மக்கள் பற்றிய திமுகவினர் அவதூறு செய்திருக்கிறார்கள்.

உத்தரப்பிரதேசம் பீகார் மாநிலங்களில் மக்கள் தொகை அதிகம். அதனால் மத்திய அரசு அவர்களுக்கு அதிக நிதியும் வழங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமய்யா உள்ளிட்டோர் தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருகிறார்கள். "உத்தரப்பிரதேசம், பீகார் மாநில மக்களுக்கு மட்டும் எப்படி அதிக நிதி கொடுக்கலாம்?" என்று அவர்கள் கேட்காத நாளில்லை.

திமுக உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினரின் உண்மை முகத்தை பிரதமர் மோடி உண்மையை அம்பலப்படுத்தியதும், "வட மாநிலங்கள் -  தென்மாநிலங்கள் இடையே பிரிவினை உண்டாக்க பார்ப்பதாக" முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வருகின்றனர். 
திமுக என்ற கட்சியே பிரிவினை சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது.

 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது', 'ஆரியம் - திராவிடம்', 'இந்தி தெரியாது போடா', 'சனாதனத்தை ஒழிப்போம்' என்று பிரிவினையை விதைப்பதே திமுக தான். 'இந்தியா என்பது ஒரு நாடல்ல. மநிலங்களின் ஒன்றியம்' என்று  இன்றளவும் திமுக பிரிவினை பேசி வருகிறது. திமுகவின் இந்த பிரிவினை சித்தாந்தத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பேசி வருகிறார். இந்து மதம்-  இந்தி மொழி - இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக என்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

திமுகவின் இந்த பிரிவினை சித்தாந்தத்தை பாசிசத்தை இந்தி கூட்டணியில் சில காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளும் ஏற்கத் தொடங்கியுள்ளன. நாட்டு மக்களின் நன்கொடையால் அயோத்தியில் கட்டப்பட்ட ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வரவில்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பிதழை கூட நேரடியாக ஏற்கவில்லை. 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 'இந்தி' கட்சித் தலைவர்களின் பொய்பிரசாரத்தை, கட்டுக்கதைகளை இந்திய மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். இந்த மக்களவைத் தேர்தலில் 'இந்தி' கூட்டணி படுதோல்வி அடைவது உறுதி. 400-க்கும் அதிகமான இடங்களில் வென்று, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பது உறுதி” என்று கூறியுள்ளார்.

ஆபிஸ் போக ஸ்கூட்டரை தேடுறீங்களா.. இதோ 120 கிமீ மைலேஜ் தரும் ஏதரின் சிறந்த ஸ்கூட்டர்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios