தருமபுரி

தருமபுரியில் பள்ளி வேனின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி 8-ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அலட்சியமாக இருந்த தனியார் பள்ளி வேன் ஓட்டுநரை காவலாளர்கள் கைது செய்தனர். 

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சேர்ந்தவர் வஜ்ஜிரவேல். கேபிள் ஆப்ரேட்டரான இவருடைய மகள் நேசிகா (13). இவர் தருமபுரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். 

நேற்று மாலை பள்ளி வகுப்புகள் முடிந்தபின்னர் பள்ளி வேன் மூலம் பென்னாகரத்திற்கு நேசிகா புறப்பட்டார். நல்லாம்பட்டி அருகே உள்ள வளைவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வேனின் கதவு திறந்து கொண்டதாம். 

அப்போது, வேனில் உட்கார்ந்திருந்த நேசிகா நிலைதடுமாறி படிக்கட்டு வழியாக வேனில் இருந்து கீழே விழுந்தார். இதில், வேனின் பின்சக்கரம் நேசிகா மீது ஏறியதில் தலைநசுங்கி நேசிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நேசிகாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

நேசிகாவின் உடலை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, உதவி ஆட்சியர் ராமமூர்த்தி, பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ., பென்னாகரம் தாசில்தார் சேதுலிங்கம், துணை காவல் கண்காணிப்பாளர் அன்புராஜ் ஆகியோர் பென்னாகரத்திற்கு சென்று நேசிகாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

உடனே உடற்கூராய்வு பரிசோதனை நடத்தி நேசிகாவின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக பென்னாகரம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து கெட்டூரைச் சேர்ந்த பள்ளி வேன் ஓட்டுநர் சிதம்பரத்தை (33) கைது செய்தனர். காவலாளர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வேனில் செல்லும் மாணவ - மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்காத பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், பள்ளி நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பென்னாகரம் அரசு மருத்துவமனை முன்பு மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.