இராமநாதபுரம்

பரமக்குடியில் வருகிற 11-ஆம் தேதி நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு வஜ்ரா தடுப்பு வாகனம், 91 இடங்களில் இரகசிய கேமராக்கள் என பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இராமநாதபுரம் மாவட்டமே காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இராமநாதபுரம் எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா  நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வரும் 11-ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகை தருவர். இந்த நிகழ்ச்சியையொட்டி இரண்டு ஐ.ஜி, மூன்று டி.ஐ.ஜி.க்கள், 15 காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் மூன்று ஆயிரம் காவலாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

வஜ்ரா உள்ளிட்ட கலவர தடுப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட உள்ளது. மாவட்டம் முழுவதும் 18 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்திலும் இரகசிய கேமரா பொருத்தப்பட உள்ளது.

பரமக்குடியில் மட்டும் 52 இடங்களிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் 21 இடங்களிலும் இரகசிய கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 91 இடங்களில் இரகசிய கேமரா பொருத்தப்படுகிறது. 

நினைவு அஞ்சலி செலுத்தும் இடத்தில் சுழலும் கேமராவும் அமைக்கப்படவுள்ளது. இந்த சுழலும் கேமராவில் பதிவுகளை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர்கள் தமது செல்லிடப்பேசிகளில் நேரடியாக பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சூழ்நிலைக்கு ஏற்ப வாகனங்களை முறைபடுத்தி அனுப்பி வைக்கவும், தேவைப்பட்டால் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் உதவியாக இருக்கும். இராமநாதபுரத்திலும், பரமக்குடியிலும் நகருக்குள் வாகனங்கள் வராமல் மாற்றுப்பாதையில் செல்லவும் ஏற்பாடு செய்துள்ளோம்.      

இராமநாதபுரம் மாவட்டத்தில் 80 இடங்கள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் காவல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் அரசியல் கட்சிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட  சரியான நேரத்திற்கு வந்து அஞ்சலி செலுத்த வேண்டும்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன” என்று எஸ்.பி.ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தார்.