சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாகவும், சீமை கருவேல மரத்தால்தான் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை நிலவுகிறது எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதன்படி சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் உத்தரவிட்டது.

ஆனால் சீமை கருவேல மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வி.மேகநாதன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் அளித்த மனுவில், கருவேலம் மரம் வளர்வதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இந்த மரம், வணிக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்திருந்தார்.

இதைதொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டு கடந்த ஏப்ரல் மாதம் சீமை கருவேல மரங்களை வெட்ட தடை விதித்திருந்தது.

இதையடுத்து, நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செய்லாளர் வைகோ, சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாகவும், சீமை கருவேல மரத்தால்தான் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை நிலவுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.